Published : 19 Oct 2020 10:23 AM
Last Updated : 19 Oct 2020 10:23 AM
90 சதவீத மக்கள் இன்னும் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகக்கூடிய வாய்ப்பில் உள்ளனர் என்று கரோனா வைரஸ் தடுப்பூசி நிர்வாக தேசிய நிபுணர் குழு தலைவர் வி.கே.பால் எச்சரித்துள்ளார். இவர் நிதி ஆயோக் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவில் கடந்த 3 வாரங்களாக கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் குறைந்து வருகிறது. பல மாநிலங்களில் தொற்றுநோய் வலுவாக உள்ளது. கேரளா, கர்நாடகம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களிலும், 3 அல்லது 4 யூனியன் பிரதேங்களிலும் தொற்று பரவல் இன்னும் அதிகரித்துக்கொண்டு செல்கிற போக்கு உள்ளது.
தற்போது இந்தியா தொற்றுக்கு எதிராக சிறப்பாக உள்ளது. ஆனாலும், இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியதிருக்கிறது. ஏனென்றால், 90 சதவீத மக்கள் இன்னும் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகக்கூடிய வாய்ப்பில் உள்ளனர்.
இந்தியாவில் குளிர்காலத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்குவதற்கு வாய்ப்பு உண்டா என்று கேட்கிறீர்கள்.
ஐரோப்பாவில் பல நாடுகளில் இது நடந்திருக்கிறது. அங்கு குளிர்காலத்தில் பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே இந்தியாவிலும் குளிர்காலத்தில் கொரோனாவின் 2-வது அலை தாக்குவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறி விட முடியாது. அது நடக்கக்கூடும். மேலும் கொரோனா வைரசைப்பற்றி நாங்கள் இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறோம்.
கொரோனா வைரஸ் தடுப்பூசியை பொறுத்தமட்டில் பாதுகாத்து வைப்பதற்கு போதுமான குளிர்சேமிப்பு வசதிகள் இந்தியாவில் உள்ளன. மேலும் தேவைக்கேற்ப இந்த வசதியை அதிகரித்துக்கொள்ளலாம்.
தடுப்பூசி தயாராகி விட்டால் வினியோகம் செய்வதற்கும், மக்களுக்கு கிடைக்கச்செய்வதற்கும் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. எனவே இதுபற்றி எந்த கவலையும் தேவையில்லை, என்றார் வி.கே.பால்.
இந்தியாவில் உறுதி செய்யப்பட்ட கரோனா தொற்று எண்ணிக்கை 74 லட்சத்தைக் கடந்துள்ளது. இதில் 7,80,000 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
மத்திய அறிவியல் துறை அமைச்சக குழு நடத்திய ஆய்வில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவின் கரோனா தொற்று எண்ணிக்கை 1 கோடியை கடந்து விடும் என்கிறார்கள். ஆனால் டிசம்பர் முதல் சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை குறையத் தொடங்கும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT