Last Updated : 19 Oct, 2020 07:45 AM

1  

Published : 19 Oct 2020 07:45 AM
Last Updated : 19 Oct 2020 07:45 AM

லண்டன் பல்கலையில் 20 ஆண்டாக மூடிக்கிடக்கும் தமிழ் துறை: மீண்டும் தொடங்க வெளிநாடு வாழ் தமிழர்கள் முயற்சி

புதுடெல்லி

லண்டன் பல்கலைக்கழகத்தில் கடந்த 1916-ல் திறக்கப்பட்ட தமிழ்த் துறை நிதிப் பற்றாக்குறையால் 20 ஆண்டுகளாக மூடிக் கிடக்கிறது. இதை மீண்டும் தொடங்க வெளி நாடுவாழ் தமிழர்கள் முயன்று வருகின்றனர்.

ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை பற்றியகல்விக்கு உலகின் முன்னணி கல்வி நிறுவனமாக லண்டன் பல்கலைக்கழகம் விளங்குகிறது. 300-க்கும் மேற்பட்ட பேராசிரியர் களைக் கொண்ட இதில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 9,500 மாணவர்கள் பயில்கின்றனர்.

பல்கலைக்கழகம் தொடங் கப்பட்ட 1916-ம் ஆண்டிலேயே 20 மொழித் துறைகளில் ஒன்றாக தமிழ்த் துறை தொடங்கப்பட்டது. இங்கு தமிழில், இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்கான கல்வி போதிக் கப்பட்டு வந்தது.

இங்குள்ள நூலகத்தில் தமிழ் தொடர்பான 1,50,000 ஆவணங்கள், ஓலைச்சுவடிகள் மற்றும் நூல்கள் ஆய்வுக்கு உரியதாக உள்ளன. இங்கு தமிழில் இளங்கலை பட்டம் பெற்ற முதல் ஆங்கிலேயர் எம்எஸ்எச் தாம்சன், மறைமலையடிகளின் மாணவர் ஆவார். இந்திய அரசால் பத்மஸ்ரீ பட்டம் அளித்து கவுரவிக்கப்பட்ட முனைவர் ஜான் மார், ஸ்டூவர்ட் பிளாக்பர்ன் முதலானவர்கள் இங்கு, தமிழ்ப் பேராசிரியர்களாக பணியாற்றியுள்ளனர்.

லண்டன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைக்கு இந்தியாவின் அப்போதைய ஆங்கிலேய அரசால் நிதியுதவி அளிக்கப்பட்டது. இந் நிலையில் இந்த நிதி தீர்ந்து போனது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 2000-ம்ஆண்டில் தமிழ்த் துறை மூடப் பட்டது. இத்துறை மீண்டும் செயல் பட்டால்தான் லண்டன் தமிழர் களின் அடுத்த தலைமுறை குழந்தைகள் தமிழில் உயர்க்கல்வி பெறமுடியும்.

எனவே இத்துறையை மீண்டும் திறக்கும் பணியில் இந்தியா, இலங்கை, மலேசியா உள்ளிட்ட நாடுகளின் தமிழர்கள் ‘ஐக்கிய ராஜ்ஜிய தமிழ் கல்வி அமைப்பு (TamilStudiesUK)’ என்ற பெயரில் ஒருங்கிணைந்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் லண்டன் பல்கலைக்கழகத்தில் எஸ்ஓஏஎஸ் என்ற தெற்காசிய கல்விக் கூடமும் (School of Oriental and Asian Studies- SOAS) இணைந்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து ஐக்கிய ராஜ்ஜிய தமிழ் கல்வி அமைப்பு செய்தித் தொடர்பாளரும் இலங்கை தமிழருமான சுந்தரம் லண்டனில் இருந்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் தொலைபேசியில் கூறும்போது, “ஆங்கிலேயர் ஆட்சியில் அளிக்கப்பட்ட தொகைவைப்பு நிதியாக வைக்கப்படாத தால் தமிழ்த் துறையை மூடும் நிலை ஏற்பட்டது.

இத்துறையை மீண்டும் தொடங்க நெடுங்கால வைப்புநிதி ரூ.100 கோடி தேவைப்படு கிறது. இதில் ரூ.60 கோடி பேரா சிரியர்களுக்கும், ரூ.40 கோடி தமிழ் மாணவர்களின் உதவித் தொகைக்காகவும் பயன்படும்.

தமிழ்த் துறையை மீண்டும் திறக்க உள்ளோம். இதுவரை ரூ.23 லட்சம் சேர்ந்துள்ளது. பாக்கித் தொகைக்காக தமிழகஅரசு, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் உள்ளிட்டோரும் உதவலாம். மொத்த தொகையும்கிடைத்தால் வரும் கல்வியாண்டிலேயே தமிழ்த்துறை செயல்பாட்டுக்கு வரும்” என்றார்.

தமிழ்த் துறைக்கானப் பங்களிப்பு நிதியை அளிக்க விரும்வோர் நேரடியாக லண்டன் பல்கலை.யின் எஸ்ஓஏஎஸ் பிரிவிடமும் செலுத்தலாம். இதன்விவரங்களை எஸ்ஓஏஎஸ் தனதுஅதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூறியுள்ளது.

கூடுதல் தகவல்களை http://www.tamilstudiesuk.org/ என்ற இணையதளத்திலும் அறியலாம். லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை செயல்படுவதை நினைவுகூரும் வகை யில் தமிழக அரசால் அங்குதிருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x