Published : 18 Oct 2020 07:53 AM
Last Updated : 18 Oct 2020 07:53 AM

திருப்பதி ஏழுமலையான் கோயில் காணிக்கையை அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய தேவஸ்தானம் முடிவு: பாஜக, இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு

திருமலை

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நிதியை அரசுகளின் பத்திரங்களில் முதலீடு செய்யும் தேவஸ்தான முடிவுக்கு பாஜக, இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் பக்தர்கள் கோடிக்கணக்கில் காணிக்கை வாரி வழங்கி வருகின்றனர். பணம்மட்டுமல்லாது தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், வீட்டு மனைப்பட்டாக்கள், பங்குச் சந்தைபத்திரங்களைக் கூட காணிக்கையாக வழங்குகின்றனர்.

இந்த கரோனா காலத்திலும் ஏழுமலையானுக்கு பக்தர்கள் தினமும் ரூ.1 கோடிக்கும் மேலாககாணிக்கை செலுத்தி வருகின்றனர். காணிக்கை பணம் அரசு வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. இதில் வரும் வட்டிஅன்னதானம் மற்றும் வளர்ச்சிப்பணிகளுக்கு பயன்படுத்தப்படு கிறது. ஆனால், வங்கி டெபாசிட் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி படிப்படியாகக் குறைத்து விட்டது. இப்போது அதிகபட்சமாக அரசு வங்கிகளில் 5.5% வட்டி மட்டுமே வருகிறது.

இந்நிலையில், வட்டி வருவாயை அதிகரிப்பது பற்றி தேவஸ்தானம் ஆலோசித்து வந்தது. பல வங்கிகளில் உள்ள வைப்புத் தொகைகள் இந்த ஆண்டு டிசம்பரில் முதிர்வடைகின்றன. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம்நடைபெற்ற தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில், ஏழுமலையானின் பணத்தை மத்திய அல்லது மாநில அரசுகளுக்கு சொந்தமான பத்திரங்களில் டெபாசிட் செய்வது என தீர்மானிக்கப்பட்டது. இவ்விஷயம் ரகசியமாக வைக்கப்பட்டது. இந்த முடிவை ஆந்திர முன்னாள் தலைமைச் செயலாளர் ஐ.வி. சுப்பா ராவ் கண்டித்திருந்தார். இதனால் இவ்விஷயம் வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சுப்பா ராவ்,"பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்து தர்ம பிரச்சாரத்திற்காகவும், பக்தர்களுக்கான வளர்ச்சிப் பணிகளுக்காகவும், அன்னதானம் வழங்கவும் பயன்படுத்த வேண்டும். இதைவிடுத்து, மத்திய, மாநில அரசு களுக்கு ஏழுமலையானின் சொத்துக்களை தாரை வார்க்கக் கூடாது" என கூறியிருந்தார்.

இதனால், தற்போது இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினரும் பாஜக நிர்வாகியுமான பானு பிரகாஷ் ரெட்டி, "இந்த விவகாரத்தில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்" என நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இதேபோல, பல்வேறு இந்து அமைப்புகள், கம்யூனிஸ்ட் கட்சி யினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x