Published : 17 Oct 2020 02:26 PM
Last Updated : 17 Oct 2020 02:26 PM
உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியா 94-வது இடத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “மோடி அரசு தனது சிறப்பு நண்பர்களின் பாக்கெட்டைத்தான் நிரப்பி வருகிறது” என்று விமர்சித்துள்ளார்.
குளோபல் ஹங்கர் இன்டக்ஸ் என்ற உலக பட்டினிக் குறியீடு 2020 நேற்று வெளியிட்ட அறிக்கையில் உலகிலேயே இந்தியாவில்தான் 5 வயதுக்குக் கீழான குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி, பராமரிப்பின்றி இருப்பதாகத் தெரிவித்தது. 2010-14 காலகட்டத்தில் குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி விரயம் செய்யப்படும் சதவீதம் 15.1 சதவீதமாக இருந்தது. 2015-19-ல் இது மோசமடைந்து 17.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
உலகப் பட்டினிக் குறியீட்டில் உள்ள 107 நாடுகளில் இந்தியா 94-ம் இடத்தில் உள்ளது. அண்டைநாடுகளான வங்கதேசம் 75-ம் இடத்திலும் பாகிஸ்தான் 88-ம் இடத்திலும் உள்ளன. இந்த இரண்டு நாடுகளை விடவும் இந்தியா மோசமாக உள்ளது.
இதைக் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், “இந்தியாவில் ஏழைகள் எல்லாம் பட்டினியோடு இருக்கிறார்கள். ஏனென்றால், மத்தியில் ஆளும் மோடி அரசு தனது சிறப்பு நண்பர்களின் பைகளை நிரப்பிக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், உலக பட்டினிக் குறியீட்டின் வரைபடத்தையும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்துள்ளார். அதில், அண்டை நாடுகளான பாகிஸ்தான் (88), நேபாளம் (73), வங்கதேசம் (75) இடத்தில் இருக்கின்றன என்பதைக் காட்டுகிறது.
இந்தியாவுக்குப் பின்வரிசையில் மொத்தம் 13 நாடுகள் மட்டுமே இருக்கின்றன. அதில் ரவானாடா (97), நைஜீரியா (98), ஆப்கானிஸ்தான் (99), லிபியா (102), மொசாம்பிக் (103), சாட் (107) ஆகிய நாடுகள் உள்ளன.
உத்தரப் பிரதேத்தில் நடந்துவரும் பெண்களுக்கு எதிரான பலாத்காரம் குறித்து ராகுல் காந்தி நேற்று ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டிருந்தார். பாரபங்கி நகரில் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்து ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
அதில், “பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதைத் தடுக்க முடியவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி பெற்றுவதற்குப் பதிலாக உத்தரப் பிரதேச குற்றவாளிகளைக் காப்பாற்ற உண்மைகளை மறைக்கப் பார்க்கிறது. இன்னும் எத்தனை பெண்கள், இன்னும் எத்தனை ஹாத்ரஸ் நடக்கப்போகிறது” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT