Published : 17 Oct 2020 12:20 PM
Last Updated : 17 Oct 2020 12:20 PM
கரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த இரண்டரை மாதங்கள் மிகவும் முக்கியமானவை. பண்டிகைகள், குளிர்காலம் வருவதால் மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்த்தன் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 62 ஆயிரத்து 212 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 74 லட்சத்து 32 ஆயிரத்து 680 ஆக அதிகரித்துள்ளது.
இதில் நம்பிக்கை அளிக்கும் வகையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65 லட்சத்து 24 ஆயிரத்து 595 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 87.78 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் அடுத்துவரும் குளிர்கால மாதங்கள், பண்டிகை காலத்தில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். பண்டிகை காலத்தில் மக்கள் கூட்டமாக ஒரு இடத்துக்குச் செல்லும்போதும், விழாக்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போதும் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல், முகக்கவசத்தை அணியாமல் இருக்கும்போது கரோனா பரவல் அதிகரிக்கும்.
மேலும், குளிர்காலத்தில் கரோனா வைரஸ் பரவல் காற்றில் நீண்டநேரம் நிலைத்திருக்கும் என்பதால் கரோனா தொற்று பரவுவதற்கான சாத்தியம் அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதே கருத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்த்தனும் கூறி மக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹர்ஸவர்த்தன் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
''கரோனா வைரஸுக்கு எதிராக 3 தடுப்பு மருந்துகள் தயாராகி வருகின்றன. இதில் ஒரு மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-வது கட்டத்தில் இருக்கிறது. மற்ற இரு தடுப்பு மருந்துகளும் 2-வது கட்டத்தில் இருக்கின்றன. இந்தியாவில் உருவாக்கப்பட்ட கரோனா வைரஸ் தடுப்பு மருந்து விரைவில் மக்களுக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
கரோனாவுக்கு எதிராக நாம் நடத்திவரும் போரில் அடுத்த இரண்டரை மாதங்கள் மிகவும் முக்கியமானவை. ஏனென்றால், குளிர்காலத்தில் கரோனா பரவும் வேகம் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமல்லாமல் பண்டிகை காலத்தில் மக்கள் நெருக்கமாகக் கூடும் வாய்ப்பு இருக்கும். அப்போதும் கரோனா பரவல் அதிகரிக்கலாம். ஆதலால், ஒவ்வொரு குடிமகனும் கரோனா விதிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்றி, சமூக விலகலைக் கடைப்பிடித்து கரோனா பரவாமல் தடுக்க வேண்டும்.
கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதிலிருந்து நாம் நம்மைத் தற்காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மட்டுமே முக்கியமானது. குறிப்பாக முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக விலகலைக் கடைப்பிடித்தல் போன்ற நடவடிக்கைகள் அவசியம்.
அதிலும் சமூக விலகலைக் கடைப்பிடித்து அனைத்து இடங்களுக்கும் செல்லுதல் என்பது மிகவும் அவசியமானது. சமூக விலகலைக் கடைப்பிடிக்கும்போது. கரோனா வைரஸ் பரவுவதற்கான பெரும்பாலான வாய்ப்புகளைத் தவிர்த்துவிடலாம்.
இந்தியாவைப் பொறுத்தவரை கரோனா வைரஸுக்கான சிகிச்சை அளிப்பதில் இந்தியா புதிய மைல்கல்லைத் தொடர்ந்து எட்டி வருகிறது.
கரோனாவிலிருந்து மீள்வோர் எண்ணிக்கை உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில்தான் அதிகமாக இருக்கிறது. கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்து வருகிறது, புதிதாக நோய்த்தொற்றுக்கு ஆளாகும் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
உலக அளவில் கரோனாவில் உயிரிழப்புகளில் மிகக்குறைவாக இருக்கும் நாடு இந்தியாதான். கரோனாவுக்கு நாள்தோறும் செய்யப்படும் பரிசோதனையின் அளவும் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக 14 லட்சம்வரை நாள்தோறும் பரிசோதனை செய்யப்படுகிறது. 9 கோடிக்கும் மேல் பரிசோதனை செய்துள்ளோம்.
முக்ககவசம், பிபிஇ கிட், வென்டிலேட்டர் போன்றவற்றை வெளிநாடுகளில் இருந்து வாங்காமல் உள் நாட்டிலேயே இந்தியா தயாரிக்கிறது''.
இவ்வாறு ஹர்ஸவர்த்தன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT