Published : 17 Oct 2020 06:42 AM
Last Updated : 17 Oct 2020 06:42 AM

2021 தொடக்கத்தில் குறிப்பிட்ட அளவில்தான் கரோனா தடுப்பு மருந்துகள் கிடைக்கும்: உலக சுகாதார அமைப்பு தகவல்

சவுமியா சுவாமிநாதன்

புதுடெல்லி

வரும் 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் குறிப்பிட்ட அளவில்தான் கரோனா வைரஸ் தடுப்பு மருந்துகள் கிடைக்கும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சவுமியா மேலும் கூறியதாவது:

வரும் 2021-ம் ஆண்டு ஜனவரி அல்லது ஏப்ரல் மாதத்தில் நமக்கு கரோனா தடுப்பு மருந்துகள் கிடைக்கும். இயல்புநிலை திரும்பிவிடும் என்று பொதுமக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 2021 தொடக்கத்தில் கரோனா தடுப்பு மருந்துகள் கிடைக்கும் என்பது உண்மைதான். ஆனால் அது எல்லோருக்கும் கிடைக்குமா என்பதுதான் தற்போதைய கேள்வி.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் குறிப்பிட்ட அளவில்தான் கரோனா தடுப்பு மருந்துகள் வெளியாகும். ஆரம்பத்தில் சுகாதாரத் துறை ஊழியர்கள், கரோனா தடுப்பு பணியில் முதல் நிலையில் உள்ள தொழிலாளர்களுக்குதான் இந்த தடுப்பு மருந்துகள் கிடைக்கும்.

அதைத் தொடர்ந்து அதிகளவில் கரோனாவால் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பவர்களுக்கும், முதியவர்களுக்கும் கரோனா தடுப்பு மருந்துகள் கிடைக்கும். அதன்பின்னர்தான் மற்றவர்களுக்கு கிடைக்கும். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் இளைஞர்கள், நல்ல உடல்நிலையைப் பெற்றுள்ளவர்களுக்கு 2022-ல்தான் தடுப்பு மருந்து கிடைக்க வாய்ப்புள்ளது. யார் யாருக்கு இந்த கரோனா தடுப்பு மருந்துகள் அவசியம் தரப்பட வேண்டும் என்பதில் முன்னுரிமை கடைப்பிடிக்கப்படும்.

சீனாவில் முதலில் ராணுவ வீரர்களுக்கு கரோனா தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதைத் தொடர்ந்து தற்போது அரசு ஊழியர்களுக்கும், சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் சீனாவில் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு தடுப்பு மருந்துகளை கொடுக்க சீன அரசு பரிசீலித்து வருகிறது. ரஷ்யாவில் சுகாதாரத் துறை ஊழியர்கள், பத்திரிகையாளர்களுக்கு தடுப்பு மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் யார் யாருக்கு தடுப்பு மருந்துகள் முதலில் தரப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டு முன்னுரிமை அளிக்கப்படும் என்று இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சவுமியா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x