Last Updated : 16 Oct, 2020 05:14 PM

 

Published : 16 Oct 2020 05:14 PM
Last Updated : 16 Oct 2020 05:14 PM

அலிகர் முஸ்லிம் பல்கலை.யின் முன்னாள் மாணவர் தலைவரின் தேர்தல் போட்டியால் சர்ச்சை: ஜின்னாவிற்கு காங். ஆதரவளிப்பதாக மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் புகார்

புதுடெல்லி

அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர் தலைவருக்கு பிஹார் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை அளித்ததன் மூலம் முகமது அலி ஜின்னாவை காங்கிரஸ் ஆதரிப்பதாக மத்திய கால்நடைத்துறை அமைச்சர் கிரிராஜ்சிங் புகார் தெரிவித்துள்ளார்.

உத்திரப்பிரதேசம் அலிகரில் 1875 இல் துவக்கப்பட்ட அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் கடந்த மே 2018 இல் ஒரு சர்ச்சை எழுந்தது. அதன் மாணவர் பேரவை சங்கத்தின் அரங்கில் பாகிஸ்தான் நிறுவனராகக் கருதப்படும் முகம்மது அலி ஜின்னாவின் உருவப்படம் காணப்பட்டது.

இதை அகற்ற வேண்டும் என பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்பினர் பல்கலைக்கு வெளியே போராட்டம் நடத்தினர். ஜின்னாவின் படம் சுதந்திரத்திற்கும் முன்பாக 1938 இல் மாட்டப்பட்டது எனவும், அதை அகற்ற முடியாது எனவும் அலிகர் முஸ்லிம் பல்கலைகழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

இவை அனைத்திற்கும் காரணமாக அச்சங்கத்தின் தலைவராக இருந்த மஷ்கூர் அகமது உஸ்மானி மீதும் புகார் எழுந்தது. ஜின்னா படவிவகாரம் மீது மாணவர் பிரச்சனையில் தலையிட முடியாது எனவும் பல்கலைகழக நிர்வாகம் கைவிரித்திருந்தது.

இந்நிலையில், பிஹாரின் தர்பங்காவை சேர்ந்த மஷ்கூர் உஸ்மானிக்கு அத்தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பளித்துள்ளது. இதற்கு பிஹார் பாஜக தலைவர்கள் இடையே கடும் விமர்சனம் கிளம்பி உள்ளது.

இது குறித்து பிஹார் பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய கால்நடைத்துறை அமைச்சருமான கிரிராஜ்சிங் கூறும்போது, ‘பிரிவினையை தூண்டிய ஜின்னாவின் ஆதரவாளருக்கு காங்கிரஸில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம், அக்கட்சியும் அதன் மெகா கூட்டணியும்

ஜின்னாவை ஆதரிக்கிறார்களா எனப் பதில் அளிக்க வேண்டும்.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் செய்தித்தொடர்பாளரான அரிவிந்த் நிஷாத் கூறுகையில், ‘தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கும் முன் அந்த வேட்பாளரின் குணம் என்ன என அனைத்து கட்சிகளும் அறிவது முக்கியம்.

ஆனால், காங்கிரஸ் அனைத்து தேர்தல்களிலும் சர்ச்சைக்குரியவர்களையே தனது வேட்பாளர்களாக நிறுத்துகிறது.’ எனத் தெரிவித்தார்.

இதுபோன்ற விமர்சனங்களை சமாளிக்க காங்கிரஸின் தரப்பில் அதன் செய்தித்தொடர்பாளரான ராஜேஷ் ராத்தோர், ’எந்தப் பிரச்சனையும் கிடைக்கவில்லை எனில் இதுபோல், மதவாதப் பிரச்சனையை பாஜக எழுப்புவது வழக்கம்.

காந்தியை கொன்ற கோட்சேவை போற்றும் இவர்கள், முதலில் தம் கட்சி வேட்பாளர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்.’ எனத் தெரிவித்தார்.

அலிகர் முஸ்லிம் பல்கலை.யின் மாணவர் பேரவைக்கு நிர்வாகிகளாகத் தேர்வாகும் மாணவர்கள் பெரும்பாலும் அரசியல் கட்சிகளில் சேர்வது வழக்கமாக உள்ளது. மத்திய அரசின் பல்கலைழகமான இதன் மாணவர்கள் பலரும் பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இடம் பெற்றுள்ளனர்.

பிஹாரின் 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதன் முடிவுகள் நவம்பர் 10 இல் வெளியாக உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x