Published : 16 Oct 2020 04:32 PM
Last Updated : 16 Oct 2020 04:32 PM
உள்நாட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கவும், அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதியைத் தவிர்க்கவும் வெளிநாடுகளில் இருந்து ஏ.சி. (ஏர் கண்டிஷனர்) இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ஏற்கெனவே, வாகனங்களுக்கான டயர், டிவி செட், எல்இடி பேனல், அகர்பத்தி போன்றவற்றின் இறக்குமதிக்கு தடை விதித்திருந்த நிலையில், இப்போது ஏ.சி.யும் அந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளிநாடு வர்த்தகத்துக்கான இயக்குநரகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
''ஸ்பிளிட் ஏசி மற்றும் பிற மாடல் ஏசிகள் வெளிநாடுகளில் இருந்து தடையின்றி இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் அவற்றுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
அதாவது வெளிநாடுகளில் இருந்து ரெப்ரிஜெரன்ட் (குளிரூட்டிகள் refrigerants ) பொருத்தப்பட்ட ஏ.சி.களை இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்படுகிறது.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலின் ஒப்புதலுடன் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் உள்நாட்டில் ஏ.சி.களுக்கான சந்தை மதிப்பு ரூ.500 கோடி முதல் ரூ.600 கோடி வரை இருக்கிறது. பெரும்பாலான ஏ.சி.கள் வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.
தற்சார்பு இந்தியா எனும் பிரச்சாரத்தை மத்திய அரசு தீவிரமாகச் செய்துவரும் நிலையில், உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கவும், உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்கவும் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஏ.சி.கள் 90 சதவீதம் சீனா, தாய்லாந்தில் இருந்துதான் கொண்டுவரப்படுகின்றன. இந்தத் தடையால் சீனாவின் ஏற்றுமதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்''.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT