Last Updated : 16 Oct, 2020 01:39 PM

 

Published : 16 Oct 2020 01:39 PM
Last Updated : 16 Oct 2020 01:39 PM

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது குறித்து விரைவில் முடிவு: பிரதமர் மோடி உறுதி

பிரதமர் மோடி காணொலி மூலம் பேசிய காட்சி: படம் | ஏஎன்ஐ.

புதுடெல்லி

விவசாயிகளின் வேளாண் உற்பத்திக்கு குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் அரசே கொள்முதல் செய்வது என்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பின் முக்கியமான பகுதி. இதைச் செய்ய அரசு உறுதி பூண்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (எப்ஏஓ) 75-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்றார். அப்போது, உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75-வது ஆண்டு விழாவையொட்டி, 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியாதவது:

''நாட்டின் உணவுப் பாதுகாப்பில் விவசாயிகளின் உற்பத்தியை அரசே கொள்முதல் செய்வது, அவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அளிப்பது என்பது முக்கியமான பகுதியாகும். அறிவியல்பூர்வமான வழியில் தொடர்ந்து சிறப்பான வசதிகள் விவசாயிகளுக்குக் கிடைக்க இந்த அரசு உறுதி பூண்டுள்ளது.

மண்டி கட்டுமானத்தையும் மேம்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை மூலம் அறிவியல்ரீதியாக கொள்முதல் செய்வது தொடரும்.

கடந்த 6 ஆண்டுகளாக வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மத்திய அரசு செய்து வருகிறது. அதில் முதலீடும் செய்து வருகிறது. மண்டி தனக்கே உரிய அடையாளத்துடன், வலிமையுடன் நீண்ட ஆண்டுகளாக இந்த நாட்டில் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, உலக உணவுத் திட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளதற்குப் பாராட்டுகள். இது மிகப்பெரிய சாதனையாகும்.

பிரதமர் மோடி வெளியிட்ட 75 ரூபாய் நாணயம்

உலக உணவுத் திட்டத்துடன் நீண்டகாலமாக இணைந்து இந்தியா பணியாற்றி வருவதும், பங்களிப்பு செய்துவருவதும் இந்த நேரத்தில் மகிழ்ச்சியளிக்கிறது. அந்த அமைப்புடன் இந்தியாவுக்கு இருக்கும் தொடர்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது.

இந்த நாட்டின் மகள்கள் திருமணத்துக்குச் சரியான வயதை அறிவிக்க குழு அமைத்தும் ஏன் அறிவிக்கவில்லை என்று எனக்குக் கடிதம் எழுதிக் கேட்கிறார்கள்.

நம்முடைய மகள்களுக்குத் திருமணத்துக்கான சரியான வயதை நிர்ணயம் செய்யவும், முடிவு செய்யவும் அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்து வருகிறது. விரைவில் முடிவு அறிவிக்கப்படும். அந்த அறிக்கை விரைவில் வந்துவிடும் என்று அனைத்து மகள்களுக்கும் உறுதியளிக்கிறேன்

சரிவிகித சத்துணவு குழந்தைகளுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய கடந்த 6 ஆண்டுகளாக எங்களின் அரசு ஒருங்கிணைந்த முழுமையான நடவடிக்கை எடுத்துவருகிறது. இதற்காக தேசிய சத்துணவு இயக்கத்தையும் அரசு தொடங்கியுள்ளது.

ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் இதுவரை 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு குழாய் மூலம் சுத்தமான குடிநீர் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. ஏழைப் பெண்களுக்கு ஒரு ரூபாய் விலையில் சானிட்டரி நாப்கின்களை அரசு வழங்கி வருகிறது''.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x