Published : 16 Oct 2020 08:16 AM
Last Updated : 16 Oct 2020 08:16 AM
பெங்களூரு கலவரம் தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேரிடம் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
பெங்களூருவில் கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி புலிகேசி நகர் காங்கிரஸ் எம்எல்ஏ அகண்டசீனிவாச மூர்த்தியின் உறவினர்நவீன் முகநூலில் சிறுபான்மையினர் குறித்து சில கருத்துக்களை பதிவிட்டார். இதைத் தொடர்ந்து டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி ஆகிய இடங்களில் ஏற்பட்ட கலவரத்தில் அகண்ட சீனிவாச மூர்த்தியின் வீடு, காவல் நிலையங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தாக்கப்பட்டன. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பெங்களூரு குற்றப்பிரிவு போலீஸார், எஸ்டிபிஐ நிர்வாகி முஷாமில் பாஷா உட்பட 421 பேரை கைது செய்துள்ளனர். 850 பக்க அளவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் போலீஸார் தாக்கல் செய்துள்ளனர். இதில் பெங்களூரு முன்னாள் மேயர் சம்பத்ராஜ், காங்கிரஸ் கவுன்சிலர் அப்துல் ரகீப் ஜாகீர் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. அவர்கள் இருவரையும் கைது செய்யக்கோரி பெங்களூருவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதனிடையே, பெங்களூரு கலவரத்தில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்புஇருப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து தேசிய புலனாய்வு (என்ஐஏ) அமைப்பு இவ்வழக்கை விசாரித்து வருகிறது. முதல்கட்டமாக கலவரத்துக்கு திட்டம் வகுத்து கொடுத்ததாக சையது சித்திக்கி (44) என்பவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் சிவாஜி நகர் காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் ஹர்ஷத், சாம்ராஜ் பேட்டை காங்கிரஸ் எம்எல்ஏ ஜமீர் அகமது கான் ஆகிய இருவரையும் வியாழக்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.
இதன்படி, ரிஸ்வான் ஹர்ஷத், ஜமீர் அகமது கான் ஆகிய இருவரும் தொம்மளூரில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் நேற்று காலை ஆஜராகினர். அவர்களிடம் அதிகாரிகள் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு பின் வெளியே வந்த ஜமீர் அகமது கான் கூறுகையில், ‘‘அரசியல் ரீதியாக பழிவாங்கும் எண்ணத்தோடு என் பெயரை இழுக்கின்றனர். எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராகி முழு ஒத்துழைப்பு வழங்குவேன்'' என்றார்.
இதனிடையே பாஜக எம்பி ஷோபா கரந்தலாஜே, ‘‘காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கலவரத்தை தூண்டிவிட்டு, அந்த தொகுதியின் தலித் எம்எல்ஏவை கொல்ல முயற்சித்துள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் டி.கே.சிவகுமார், சித்தராமையா போன்ற காங்கிரஸ் தலைவர்கள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்''என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT