Published : 15 Oct 2020 09:32 PM
Last Updated : 15 Oct 2020 09:32 PM
கேரளாவில் சுகாதார மற்றும் சுகாதார ஆராய்ச்சியில் உலக தரத்துடன் கூடிய நச்சுயிரியல் ஆய்வு மையம் திறக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் இந்த ஆய்வு மையத்தை முதல்வர் பினராயி விஜயன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
திருவனந்தபுரம் அருகே உள்ள தோன்னைக்கல் என்ற இடத்தில் உயிர் அறிவியல் பூங்காவில் சர்வதேச தரத்துடன் கூடிய நச்சுயிரியல் மையத்தின் முதல்கட்ட செயல்பாடுகளை காணொலி மூலம் முதல்வர் பினராயி விஜயன் இன்று தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியது:
கேரளாவில் மிக சிறப்பான சுகாதார அமைப்பின் நடவடிக்கைகள் காரணமாகவே கொள்ளை நோய்களான நிப்பா மற்றும் கரோனாவை நம்மால் தடுக்க முடிந்தது. ஆர்த்ரம் மிஷன் என்ற திட்டத்தின் மூலம் கேரளாவில் பொது சுகாதாரப் பணிகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்த கேரளாவால் முடிந்தது. ஆனால் அதனால் மட்டும் நாம் இன்று எதிர்கொள்கின்ற வாழ்க்கை முறை நோய்கள் உட்பட சுகாதார பிரச்சினைகளையும், புதிதாக ஏற்பட்டு வரும் தொற்று நோய்களையும் தடுக்க முடியாது.
இந்த நோய்களை தடுக்க வேண்டுமென்றால் நாம் இப்போது தொடங்கியுள்ள மேம்படுத்தப்பட்ட நச்சுயிரியல் ஆய்வு மையம் போன்ற நிறுவனங்கள் மிகவும் அவசியமாகும். தற்போது ஏற்பட்டுள்ளது போன்ற கொள்ளை நோய்களை தடுக்கவும், நோய்கள் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளவும் தான் இது போன்ற நிறுவனங்களை நாம் தொடங்கினோம். பலதரப்பட்ட வைரஸ்கள் மற்றும் வைரஸ் தொற்று நோய்கள் ஆகியவற்றைக் குறித்து ஆராய்ச்சி செய்வதற்கும், அவை தொடர்பான ஆலோசனைகளை நடத்துவதற்கும் இந்த நிறுவனம் பெரிதும் உதவும்.
2017 ஆம் ஆண்டு உலகப் பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகளும், கேரளாவைச் சேர்ந்தவர்களுமான பேராசிரியர் எம்.வி. பிள்ளை மற்றும் டாக்டர் சாரங்க்தரன் ஆகியோர் தான் தொற்று நோய்களுடன் தொடர்பான தீவிர ஆராய்ச்சிக்கு ஒரு நிறுவனம் கேரளாவில் இல்லை என்பதை சுட்டிக் காண்பித்தனர். அவர்கள் இருவரின் யோசனைப்படி தான் கேரளாவில் நச்சுயிரி ஆராய்ச்சிக்கு ஒரு மையம் அமைக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அந்த தீர்மானம் நல்ல முடிவாக இருந்தது என்பது பின்னர் நம்முடைய அனுபவம் மூலம் தெரியவந்தது.
2018 ஆம் ஆண்டு நிப்பா வைரஸ் பரவிய போது சுகாதாரத் துறையில் மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கை காரணமாகவே அந்த நோய் அதிக அளவில் பரவுவதை நம்மால் தடுக்க முடிந்தது. நச்சுயிரி மையத்தை ஏற்படுத்துவதற்கான பொறுப்பு மாநில அறிவியல் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் கவுன்சிலுக்கு வழங்கப்பட்டது. டாக்டர் எம். வி. பிள்ளையும், டாக்டர் சாரங்க்தரனும் நம்மை உலக நச்சுயிரி தொடர்பு வட்டத்திற்குள் இணைத்துள்ளனர். டாக்டர் ராபர்ட் காலோ, டாக்டர் வில்லியம் ஹால் என்ற உலகப் பிரசித்தி பெற்ற நச்சுயிரி நிபுணர்களுடன் இணைந்து செயல்படவும் நம்மால் முடிந்தது. இந்த திட்டத்திற்கு இந்தியாவிலுள்ள நிபுணர்களும் நல்ல முறையில் ஒத்துழைத்தனர். டாக்டர் வில்லியம் ஹாலை முக்கிய ஆலோசகராக நியமித்துள்ளோம். மேலும் அவர் இந்த ஆய்வுக் கூடத்திற்கு வந்து பார்வையிட்டுள்ளார். அவரது ஆலோசனைப்படியும் தொடர் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு பிப்ரவரியில் முதல்கட்ட கட்டிட தொடக்க விழா நடந்தது. நோயை கண்டுபிடிக்கும் வசதியும், அதற்கு உதவும் வகையில் ஆராய்ச்சிக்கான வசதியும் உள்ள இரண்டு பிரிவுகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளது. முக்கியமான எல்லா அடிப்படை வளர்ச்சி பணிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் இதற்கு உதவும் வகையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன இந்தத் துறையில் நம்முடைய நாட்டில் உள்ள பிரபல நிறுவனங்களான ஐ.சி.எம்.ஆர், ஆர்.ஜி.சி .பி, என்.ஐ.எஸ். டி, ஐ. ஐ.எஸ்.இ.ஆர் ஆகியவற்றின் ஒத்துழைப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற நச்சுயிரி நிபுணரான டாக்டர் அகில் பானர்ஜி இந்த நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்று உள்ளார். ஏராளமான ஆட்களின் கடின முயற்சியின் பலனாகத் தான் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான கே.கே.சைலஜா, கடகம்பள்ளி சுரேந்திரன், துணை சபாநாயகர் சசி, டப்ளின் பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியரும், நச்சுயிரி மையத்தின் முக்கிய ஆலோசகருமான டாக்டர் வில்லியம் ஹால், அமெரிக்காவை சேர்ந்த தாமஸ் ஜெபர்சன் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் என்.வி பிள்ளை, அறிவியல் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் கவுன்சில் உறுப்பினர் செயலாளர் டாக்டர் எஸ். பிரதீப் குமார், நிர்வாக துணைத் தலைவர் டாக்டர் கே. பி. சுதீர், மேம்படுத்தப்பட்ட நச்சுயிரி மையத்தின் இயக்குனர் டாக்டர் அகில் சி. பானர்ஜி மற்றும் மக்கள் பிரதிநிதிகள், விஞ்ஞானிகள், அதிகாரிகள் ஆகியோர் இந்த தொடக்க விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த ஆய்வு மையத்தினர் பரிசோதனைக்கூடம் குறித்து மேலும் தெரிவித்த தகவல்கள்:
கரோனா உட்பட உள்ள வைரஸ் தொற்றை கண்டுபிடிப்பதற்கு தேவையான ஆர்.டி. பி. சி. ஆர், மற்ற ஆராய்ச்சிகளுக்கான ஜெல் டாக்குமெண்டேஷன் சிஸ்டம், பயோ சேஃப்டி லெவல் கேபினட்ஸ், கார்பன்-டை-ஆக்சைடு இன்குபேட்டர், சென்ட்ரிபியூஜ், எலக்ட்ரோபோரசிஸ் யூனிட், வாட்டர்பாத் சிஸ்டம், நானோ போட்டோ மீட்டர் உள்பட முதல்கட்ட செயல்பாடுகளுக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் தயாராக உள்ளன. மற்ற முக்கிய உபகரணங்களை வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நச்சுயிரி மையத்தின் விரிவாக்கம் நடந்து கொண்டிருக்கும் போதே தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவமுள்ள ஆராய்ச்சியையும், அதன் செயல்பாடுகளையும் இந்த மையம் ஏற்றுக்கொள்ளும். தற்போது அறிவியல் தொழில் நுட்பத்துறை துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த மையம் முழு செயல்பாட்டுக்கு வரும்போது தன்னாட்சி நிறுவனமாக மாற்றவும் அரசு தீர்மானித்துள்ளது.
பல்வேறு வகையான நச்சுயிரி ஆராய்ச்சி விவரங்களை அடிப்படையாக வைத்து 8 அறிவியல் உட்பிரிவுகள் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன. நோய் கண்டுபிடிப்பு முறையுடன் தொடர்புள்ள கிளினிக்கல் நச்சுயிரியும், வைரஸ் கண்டுபிடித்தலும் தான் முதல் கட்டத்தில் தொடங்கும் இரண்டு பிரிவுகள் ஆகும். இதனுடன் பிஎஸ்எல் 3 பரிசோதனைக்கூட முறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மற்ற பிரிவுகள் 1 பி கட்டம் நிறைவடையும் போது ஏற்படுத்தப்படும். 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள முழு வடிவமைக்கப்பட்ட கட்டிடத்தில் தான் இந்த புதிய பிரிவுகள் செயல்படுகின்றன. மொத்தம் 80 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பல அதிநவீன வசதிகளுடன் இந்த மையம் செயல்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT