Last Updated : 15 Oct, 2020 02:12 PM

1  

Published : 15 Oct 2020 02:12 PM
Last Updated : 15 Oct 2020 02:12 PM

டிஆர்பி ரேட்டிங் மோசடி; செய்தி சேனல்கள் வார தரவரிசைப் பட்டியல் வெளியிடுவது 12 வாரங்களுக்கு நிறுத்தம்: பிஏஆர்சி அறிவிப்பு

பிரதிநிதித்துவப்படம்

மும்பை

சில தொலைக்காட்சி சேனல்கள், டிஆர்பி ரேட்டிங் புள்ளிகளில் மோசடி செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தீவிரமடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகும் செய்திச் சேனலுக்கான டிஆர்பி ரேட்டிங் வெளியிடுவது 12 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது என்று நேயர்களுக்கான ஒளிபரப்பு ஆய்வுக் குழு (பிஏஆர்சி) தெரிவித்துள்ளது.

மும்பையில் உள்ள ரிபப்ளிக் சேனல், மராத்தியைச் சேர்ந்த பக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா ஆகிய சேனல்கள் டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டுப் பார்வையாளர்களையும், வருமானத்தையும் பெருக்கும் நோக்கில் செயல்பட்டதாக மும்பை போலீஸார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக 5 பேரைக் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பார்வையாளர்கள் மற்றும் விளம்பரதாரர்களைக் கவரும் நோக்கில் ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் சேனல்களை எந்நேரமும் ஆன் செய்தே வைத்திருப்பதற்கு மாதம் ரூ.400 முதல் ரூ.700 வழங்கப்பட்டு வந்துள்ளது கண்டறியப்பட்டது.

இந்த டிஆர்பி மோசடி தொடர்பாக ரிபப்ளிக் சேனலின் செய்திப்பிரிவில் உள்ள சில உயர் அதிகாரிகள் நேற்று போலீஸ் விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். ஆனால், ரிபப்ளிக் சேனல் தாங்கள் எந்த முறைகேடும் செய்யவில்லை எனக் கூறி மறுத்து வருகிறது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பார்வையாளர்களை மதிப்பீடு செய்து டிஆர்பியைக் கணக்கிட்டு வெளியிடும் பிஏஆர்சி நிறுவனம் அடுத்த ஒருவாரத்துக்கு அனைத்து மொழிகளின் செய்தி சேனல்களின் வார டிஆர்பி ரேட்டிங் கணக்கிடுவதை நிறுத்திவைப்பதாக இன்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து பிஏஆர்சி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “ புள்ளிவிவரங்களை மதிப்பிடுதல், தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றில் எங்கள் நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழு ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது. இந்த ஆய்வுகளுக்கு 8 முதல் 12 வாரங்கள் தேவைப்படும்.

ஆதலால், அடுத்த 12 வாரங்களுக்கு அனைத்து மொழிகளிலும் செய்தி சேனல்களுக்கான டிஆர்பி ரேட்டிங் வாரந்தோறும் வெளியிடுவது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ரிபப்ளிக் சேனல் டிஆர்பி ரேட்டிங் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை விசாரி்க்க மறுத்த உச்ச நீதிமன்றம், மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு ரிபப்ளிக் சேனல் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x