Published : 15 Oct 2020 01:00 PM
Last Updated : 15 Oct 2020 01:00 PM
உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி மீது அவதூறான குற்றச்சாட்டுகளைக் கூறிய ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டியை பதவியிலிருந்து நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் ஜிஎஸ். மணி, பிரதீப் யாதவ் ஆகிய இருவரும் இந்த மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, கடந்த சில நாட்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில், “மாநிலத்தில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி டி.எஸ்.ரமணா கட்டுப்படுத்துகிறார். தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்” என்று பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருந்தார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி மீது அவதூறான குற்றச்சாட்டுகளைக் கூறியது தொடர்பாக வழக்கறிஞர்கள் இருவர் ஆந்திர முதல்வர் பதவியிலிருந்து ஜெகன்கமோனை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
''ஊழல், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் உள்பட 20 கிரிமினல் வழக்குகள் ஜெகன்மோகன் ரெட்டி மீது நிலுவையில் உள்ளன. இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளான ஜெகன்மோகன் ரெட்டி, எந்த விதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி மீது அவதூறான குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார். அவரை உடனடியாக முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.
நீதிமன்றத்திலிருந்து சுயலாபம் அடைவதற்காக, தனது பதவியையும், அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தி, வெளிப்படையாக ஒரு நீதிபதி மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை ஜெகன்மோகன் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த நீதிபதி மீது அரசியல் உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டைக் கூறி நீதித்துறைக்கு மக்கள் மனதில் பெரும் களங்கத்தை ஜெகன்மோகன் உருவாக்கியுள்ளார்.
மூத்த நீதிபதி மீது குற்றச்சாட்டு கூறிய ஜெகன்மோகன் ரெட்டியை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும். அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்”.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT