Published : 15 Oct 2020 09:57 AM
Last Updated : 15 Oct 2020 09:57 AM
கரோனா பரவல் சூழலில் முதல் தேர்தலாகப் பிஹார் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கானப் பிரச்சாரத்தில் காணொலிக் காட்சிகள் மூலமாக பலன் இல்லை என பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் நேரடியாகக் களம் இறங்குகின்றனர்.
அக்டோபர் 28 முதல் பிஹாரின் 243 தொகுதிகளின் சட்டப்பேரவை தேர்தலுக்காக முதல் பிரச்சாரக் கூட்டம் காணொலி காட்சி மூலம் பாஜக நடத்தியது. இதை தொடர்ந்து மற்ற அரசியல்கட்சிகளும் காணொலிக் காட்சிகள் மூலம் பிரச்சாரம் செய்து வந்தனர்.
கரோனா பரவல் சூழலில் நேரடியாக வாக்காளர்களை அனுகாமலே தேர்தல் நடந்து முடிந்து விடும் நிலையும் உருவானது. ஆனால், பெரிய அளவிலான பலன் இதில் கிடைத்ததாகத் தெரியவில்லை.
குறிப்பாக கிராமப்புற மக்களிடம் தங்கள் கருத்தை அரசியல் தலைவர்களால் கொண்டு சேர்க்க முடியவில்லை. இதற்கு அவர்களில் பெரும்பாலானவர்களிடம் ஆண்ட்ராய்டு கைப்பேசிகள் இல்லாமல் போனது காரணமாகும்.
இவை நகர்புறங்களில் இருந்தாலும், இதற்காக நேரம் ஒதுக்கி தம் கைப்பேசிகளில் பலராலும் பார்க்க முடியவில்லை. காணொலிக் கூட்டங்களை அவர்களது கட்சியினர் மட்டுமே கட்டாயத்தின் பேரில் பார்க்கும் நிலையும் இருந்தது.
இதனால், வேறுவழியின்றி பாரம்பரிய முறையில் நேரடியாகப் பொதுக் கூட்டங்கள் நடத்தி தேர்தல் பிரச்சாரம் செய்ய அரசியல் கட்சி தலைவர்கள் தயாராகி வருகின்றனர். இந்தவகையிலும் முதல் கூட்டமாக நேற்று முன்தினம் பிஹாரின் புத்த கயாவில் பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பிரச்சாரக் கூட்டம் நடத்தினார்.
இதன் முக்கிய கூட்டணியான ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியு) தலைவரான முதல்வர் நிதிஷ்குமாரும் பாகல்பூர் பகுதியில் நேற்று நேரடிப் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 12 பிரச்சாரக் கூட்டங்கள் நேரடியாக நடத்த தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. இதில் ஏழு கூட்டங்களில் நிதிஷ்குமாரும் இணைந்து பங்கேற்க உள்ளார்.
இவர்களது தேசிய ஜனநாயக முன்னணி கூட்டணியில் இருந்து பிரிந்த லோக் ஜன சக்தியின்(எல்ஜேபி) தலைவர் சிராக் பாஸ்வானும் 21 ஆம் தேதி முதல் தனது நேரடிப் பிரச்சாரக் கூட்டங்களை துவக்க உள்ளார்.
எதிர்கட்சிகளின் மெகா கூட்டணியின் உறுப்பினர்களும் நேரடிப் பிரச்சாரத்திற்கு தயாராகி விட்டனர். இதற்கு தலைமை ஏற்கும் ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) சார்பிலும் லாலு பிரசாத் யாதவின் மகனான தேஜஸ்வீ இன்று முதல் நேரடிப் பிரச்சாரம் செய்கிறார்.
காங்கிரஸ் தலைவர்களில் ராகுல் காந்தியின் ஆறு மற்றும் பிரியங்கா வத்ராவின் மூன்று பிரச்சாரக் கூட்டங்களும் முடிவு செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற பிரச்சாரங்களுக்கு வழக்கமாக வாடகைக்கு எடுக்கப்படும் ஹெலிகாப்டர்களும் பிஹார் வானில் பறக்கத் துவங்கி விட்டன.
பாஜக 4, ஜேடியு மற்றும் ஆர்ஜேடி தலா 2, எல்ஜேபியில் ஒரு ஹெலிகாப்டர்களும் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. பிரச்சார மேடைகளில் கரோனா மீதானப் பாதுகாப்புடன் தலைவர்கள் பேசிச் சென்றாலும், க்கூட்டங்களுக்கு வரும் பொதுமக்கள் நிலை தான் கேள்விக்குறியாகும் எனக் கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT