Published : 22 Sep 2015 02:20 PM
Last Updated : 22 Sep 2015 02:20 PM
இந்திய-அமெரிக்க வர்த்தக வியூகப் பேச்சுவார்த்தை வாஷிங்டனில் தொடங்கியது. இந்தச் சந்திப்பில் அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடேன் உரையாற்றும்போது இந்தியாவின் சிறந்த நண்பன் அமெரிக்கா என்றார்.
வாஷிங்டனில் தொடங்கிய இந்த உரையாடலின் போது ஜான் கெர்ரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் உரையாற்ற, இரு நாடுகளையும் சேர்ந்த 400 தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு அமெரிக்க பயணத்தின் போது அதிபர் ஒபாமா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இந்த உரையாடலை மேற்கொள்ள முடிவெடுத்தனர்.
அமெரிக்க வர்த்தக செயலர் பென்னி பிரிட்ஸ்கர், மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் ஆகியோரும் உரையாற்றினர். இந்திய-அமெரிக்க வர்த்தக கவுன்சிலின் 40-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த உரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடேன் பேசும்போது, “இந்திய - அமெரிக்க கூட்டுறவு 21-ம் நூற்றாண்டை தீர்மானிக்கும். இது வெறும் கூட்டுறவு மட்டுமல்ல. அமெரிக்க நிர்வாகம் இந்தியாவின் சிறந்த நண்பனாகச் செயல்பட விரும்புகிறது. இருதரப்பு வர்த்தகம் மற்றும் கூட்டுறவின் முழு ஆற்றலையும் பயன்படுத்தி மேலும் சீர்த்திருத்தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது” என்றார்.
ஜான் கெர்ரி கூறும்போது, “எப்போதும் முன்னேற்றத்துக்கான வழிவகை இருந்த போதிலும், இப்போதை விட இருதரப்பு உறவுகளுக்கான சிறந்த சூழல் இருந்ததில்லை. சுத்தமான எரிசக்தியிலிருந்து, வான்வழி சேவைகள், நிதிச்சேவைகள், திரைப்படங்கள், இதில் ஹாலிவுட், பாலிவுட் எப்போதும் மிகச்சிறப்பாக விளங்கி வருகின்றன” என்றார்.
சுஷ்மா ஸ்வராஜ் பேசும்போது, “மதிப்புகளின் ஒத்திசைவு இருநாடுகளையும் நெருக்கமாக பிணைத்ததோடு, பிரதமர் மோடியின் ஆக்கபூர்வ அணுகுமுறை மற்றும் புதிய கருத்துகளின் அணிவரிசை ஆகியவையும் இருநாட்டு உறவுகளை நெருங்கச் செய்துள்ளது. இந்தியாவின் பொருளாதார லட்சியங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்க வர்த்தகத்துக்கு வாய்ப்பை வழங்கியுள்ளது” என்றார்.
ஷோபனா பார்தியா, இந்திரா நூயி ஆகியோருக்கு உலக தலைமைத்துவ விருது:
எச்.டி. மீடியாவின் தலைவர் மற்றும் எடிட்டோரியல் இயக்குநரான ஷோபனா பார்தியா மற்றும் பெப்சி தலைமைச் செயலதிகாரி இந்திரா நூயி ஆகியோருக்கு அமெரிக்க-இந்திய வர்த்தக கவுன்சில் உலக தலைமைத்துவ விருது அளித்தது.
இந்திரா நூயி கூறும்போது, “இந்தியா, அமெரிக்கா என்ற இருபெரும் நாடுகளின் ஆற்றல்கள் குறித்து எங்களுக்கு சிறந்த நம்பிக்கை உள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT