Published : 15 Oct 2020 08:10 AM
Last Updated : 15 Oct 2020 08:10 AM

குச்சுப்புடி கலைஞர் ஷோபா நாயுடு மரணம்: தெலங்கானா முதல்வர் இரங்கல்

ஹைதராபாத்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அனகாபல்லி பகுதியில் 1956-ம் ஆண்டு பிறந்தவர் ஷோபா நாயுடு(64). சிறு வயது முதலே குச்சுப்புடி நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர், வெம்படி சின்னசத்யம் என்பவரிடம் முறைப்படி நடனம் கற்று, தனது 12-வது வயதில் அரங்கேற்றம் செய்தார்.

குச்சுப்புடியில் சத்யபாமா, பத்மாவதி போன்ற வேடமணிந்து நடனமாடுவதில் சிறந்து விளங்கினார். இவருக்கு மத்திய அரசு கடந்த 2001-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. இவர் ஹைதராபாத் குச்சுப்புடி கலை அகாடமியில் முதல்வராக பதவி வகித்தார். நித்ய சூடாமணி (1982), சங்கீத நாடக அகாடமி (1991), என்.டி. ராமாராவ் (1998) உட்பட பல்வேறு விருதுகளை இவர் வாங்கியுள்ளார்.

குச்சுப்புடி நடனத்தின் புகழை நம் நாட்டில் மட்டுமல்லாமல் ரஷ்யா, அமெரிக்கா, துருக்கி, ஹாங்காக், வெனிசுலா போன்ற பல்வேறு நாடுகளில் பரவச் செய்தவர் ஷோபா நாயுடு. கடந்த சில நாட்களாக நரம்பு மண்டல பிரச்சினையால் பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை ஷோபா நாயுடு உயிரிழந்தார். இவரது மறைவுக்கு தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பல நடனக் கலைஞர்கள், இவரின் மாணவ, மாணவியர் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x