Published : 14 Oct 2020 05:07 PM
Last Updated : 14 Oct 2020 05:07 PM
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் ராகோபூர் தொகுதியில் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்தார்.
வேட்புமனுத் தாக்கலின்போது, தேஜஸ்வி யாதவுடன் அவரின் சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ், கட்சியின் மூத்த தலைவர் போலா ராய் ஆகியோர் மட்டுமே உடன் சென்றனர். வைஷாலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தேஜஸ்வி தாக்கல் செய்தார்.
பிஹாரில் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
பாஜக தலைமைக்கு எதிரான கூட்டணிகள் சார்பில் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் முன்னிறுத்தப்பட்டுள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு ராகோபூர் தொகுதியில் போட்டியி்டடு தேஜஸ்வி யாதவ் வென்றார்.அதே தொகுதியில் இந்த முறையும் போட்டியிடுகிறார்.
ராகோபூர் தொகுதியில் தேஜஸ்வி யாதவை எதிர்த்து பாஜக சார்பில் சதீக் குமார் போட்டியிடுகிறார். கடந்த முறை பாஜக சார்பில் சதீஸ் குமார் போட்டியி்ட்டு தேஜஸ்வியிடம் வீழ்ந்தார். அந்த நேரத்தில் பாஜக தனியாகப் போட்டியி்ட்டது. ஆனால், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன் ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ராகோபூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் இருமுறை போட்டியி்ட்டு எம்எல்ஏவாகியுள்ளார், ராப்ரி தேவி கடந்த 2005-10ல் போட்டியிட்டு எம்எல்ஏ ஆகியுள்ளார்.
வேட்புமனுத் தாக்கலுக்கு முன் தேஜஸ்வி யாதவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “ பிஹாரில் மகா கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், அதற்கான அலை மக்கள் மத்தியில் வீசுகிறது. முதல்வர் நிதிஷ் குமார் இதுவரை உதவாத முதல்வராகத்தான் இருந்துள்ளார்.
பிஹார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தர முடியவில்லை, பாட்னா பல்கலைக்கழகத்துக்கு மத்திய பல்கலைக்கழக அந்தஸ்தும்பெற்றுத் தர முடியவில்லை. எங்கள் ஆட்சி அமைந்தவுடன் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை அளிக்கும் தி்டடத்துக்கு ஒப்புதல் தரப்படும். இந்த திட்டத்தை நினைத்து நிதிஷ் குமார் சிரிக்கிறார். உண்மையான பிஹார் மக்களுக்குத்தான் நாங்கள் சொல்வது புரியும்.” எனத் தெரிவி்த்தார்
வேட்புமனுத் தாக்கல் செய்யும்முன், தனது தாய் ராப்ரி தேவியை பாட்னாவில் உள்ள இல்லத்தில் சந்தித்து தேஜஸ்வி யாதவ் ஆசி பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT