Published : 14 Oct 2020 03:30 PM
Last Updated : 14 Oct 2020 03:30 PM
கேரள காங்கிரஸ் கட்சியின் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியிலிருந்து ஜோஸ் கே மாணி தலைமையிலான கேரள காங்கிரஸ்(எம்) வெளியேற முடிவு செய்துள்ளது. மாறாக, ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியில் இணைய முடிவு செய்துள்ளது.
கேரள மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும்நிலையில் திடீரென கூட்டணி மாற்றம் ஏற்பட்டுள்ளது, காங்கிரஸ் கட்சிக்கு மாநிலத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம்.
காங்கிரஸ் ஆதரவில் பெற்ற மாநிலங்களவை எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்யப்போவதாக, ஜோஸ் கே மாணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேரள காங்கிரஸ்(எம்) கட்சியின் தலைவர் ஜோஸ் கே.மாணி கோட்டயத்தில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியஜனநாயக முன்னணி கூட்டணியிலிருந்து விலக முடிவு செய்துள்ளோம். முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியில் இணைய விருப்பமாக இருக்கிறோம்.
இதுகுறித்து அந்தக் கட்சிதான் முடிவு எடுக்க வேண்டும். நாட்டில் மதச்சார்பின்மையை பாதுகாக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணி எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை.
மாநிலத்தில் ஏழைகள், விவசாயிகள் முன்னேற்றத்துக்கு முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு ஏராளமான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன நாட்டில் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து இடதுசாரிகள் போராடி வருவது என்னை ஈர்த்தது ” எனத் தெரிவித்தார்.
ஜோஸ் கே. மாணியின் அறிவிப்புக்கு முதல்வர் பினராயி விஜயன் வரவேற்புத் தெரிவித்துள்ளார். முதல்வர் பினராயி விஜயன் விடுத்த அறிவிப்பில் “ இடது ஜனநாயக முன்னணி கூட்டணியின் தலைமை ஜோஸ் கே மாணியை வரவேற்கிறது. காங்கிரஸுடன் 38ஆண்டுகால உறவை முறித்துவிட்டு, ஜோஸ் கே மாணி எடுத்துள்ள முடிவு சரியானது. ஜோஸ் கே மாணியின் முடிவு குறித்து கட்சியின் கூட்டத்தில் பேசப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
ஆனால், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஜோஸ் கே. மாணியின் செயலை கடுமையாக விமர்சித்துள்ளது. ஜோஸ்கே மாணியை மாநிலங்களவை எம்.பி.யாக்கிய காங்கிரஸின் முதுகில் குத்திவிட்டார் என்று விமர்சித்துள்ளது.
ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் எம்எம்ஹசன் கூறுகையில் “ காங்கிரஸ் ஆதரவுடன் வென்ற அனைத்து பதவிகளையும் ஜோஸ் கே மாணி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT