Published : 14 Oct 2020 01:35 PM
Last Updated : 14 Oct 2020 01:35 PM
''புதிய படங்கள் வெளியாகும் வரை சினிமா அரங்குகள் மீண்டும் திறக்கப்படாது'' என கோவா மாநில தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கரோனா வைரஸ் பரவல் தீவிரம் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது முதல் திரையரங்குகளும் நாடு முழுவதும் மூடப்பட்டன.
ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த வாரம், ''வரும் 15 -ம் தேதி முதல் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும், கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும்'' என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளைத் திறக்க மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு அனுமதி வழங்கியுள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கோவா அரசு வியாழக்கிழமை முதல் சினிமா அரங்குகளை மீண்டும் திறக்க அனுமதித்துள்ளது. ஆனால் மத்திய அரசும் மாநில அரசும் அனுமதி வழங்கிய பின்னும், கோவா மாநில தியேட்டர்களைப் பொறுத்தவரை ''புதிய படங்கள் வெளியாகும் வரை மாநிலத்தில் உள்ள திரை அரங்குகள் திறக்கப்படாது'' என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று, செய்தியாளர்களை சந்தித்த கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறுகையில், ''அக்டோபர் 15 முதல் கோவாவில் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்படும், அடுத்த உத்தரவு வரும் வரை கேசினோக்கள் மூடப்பட்டிருக்கும். மத்திய அரசின் 5.0 வழிகாட்டுதலின் ஒரு பகுதியாக திரையரங்குகளை மீண்டும் திறக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
இருப்பினும், கோவாவில் உள்ள தியேட்டர் உரிமையாளர்களின் பிரதிநிதி ஒருவர் கூறுகையில், ''தற்போது புதிய படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதால், சினிமா அரங்குகள் திறக்கப்படுவது சாத்தியமில்லை'' என்றார்.
இதுகுறித்து பாஜக எம்எல்ஏவும் அனைத்து கோவா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பிரவீன் ஜான்டே பிடிஐயிடம் கூறியதாவது:
''நாடு முழுவதும் ஒரே நேரத்தில் திரைப்படங்கள் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால் பிற மாநிலங்களில் திரையரங்குகளை மூடப்பட்டிக்கும் பட்சத்தில் விநியோகஸ்தர்கள் திரைப்படங்களை வெளியிட நினைப்பது சாத்தியமற்றது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் உள்ள தியேட்டர்கள் இன்னும் திறக்கப்படவில்லை. புதிய திரைப்படங்கள் வெளியாகும் வரை நாங்கள் திரையரங்குகளைத் திறக்கப் போவதில்லை.''
இவ்வாறு கோவா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பிரவீன் ஜான்டே தெரிவித்தார்.
ஜனவரியில் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தயார் நிலை
கோவாவில் 40 திரைப்பட அரங்குகள் உள்ளன. இதில் தலைநகர் பனாஜியில் இயங்கிவரும் 'மல்டிப்ளெக்ஸ் ஐனோக்ஸ் லீஷர் லிமிடெட்' திரை அரங்குகள் என்டர்டெயின்மென்ட் சொசைட்டி ஆஃப் கோவா (இ.எஸ்.ஜி)க்கு சொந்தமானது. இ.எஸ்.ஜி துணைத் தலைவர் சுபாஷ் ஃபல்தேசாய் அவர்கள் கூறுகையில், ''தியேட்டர்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன, திரைப்படங்கள் திரையிட அடுத்த மாதம்தான் தயாராக இருக்கும். அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டு ஜனவரியில் ஒத்திவைக்கப்பட்டுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவை (ஐ.எஃப்.எஃப்.ஐ) நடத்தவும் இ.எஸ்.ஜி தற்போது தயாராகி வருகிறது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT