Last Updated : 14 Oct, 2020 07:50 AM

5  

Published : 14 Oct 2020 07:50 AM
Last Updated : 14 Oct 2020 07:50 AM

தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி?- பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, பி.எல்.சந்தோஷ் தீவிர ஆலோசனை

சி.டி.ரவி

புதுடெல்லி/பெங்களூரு

தமிழக பாஜக‌ மேலிடப் பொறுப்பாளராக கர்நாடக முன்னாள் அமைச்சர் சி.டி.ரவி நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளராக இருந்த முரளிதர ராவ் கடந்த செப்டம்பர் 26-ம் தேதி அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், புதிய பொறுப்பாளரை நியமிப்பது குறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக அமைப்பு தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோர் கடந்த ஒருவாரமாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தமிழக ஆர்எஸ்எஸ் மூத்த நிர்வாகி கேசவ் உள்ளிட்ட மூத்த தலைவர்களுட‌ன் கருத்து கேட்டுள்ளனர்.

இதுகுறித்து பாஜக மேலிடத் தலைவர்களிடம் விசாரித்தபோது, "தமிழக அரசியலை நன்கு அறிந்த, தேர்தல்களை எதிர்கொண்ட அனுபவம் வாய்ந்த‌ ஒருவரையே மேலிடப் பொறுப்பாளராக நியமிக்க‌ வேண்டும் என்பதில் ஜே.பி.நட்டா உறுதியாக இருக்கிறார். அதேநேரம் தமிழக மக்களிடையே இந்தி எதிர்ப்பு, வட இந்தியர் எதிர்ப்பு மனநிலை நிலவுகிறது. இதனால் மேலிடப் பொறுப்பாளர்களாக இருந்த பிரகாஷ் ஜவடேகர், பியூஷ் கோயல் ஆகிய வட இந்திய தலைவர்களால் எதிர்பார்த்த முடிவை எட்டமுடியவில்லை.

எனவே இம்முறை ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய தென்மாநிலங்களைச் சேர்ந்த தென்னிந்தியர் ஒருவரை நியமிக்க வேண்டும். இதன்படி பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி (கர்நாடகா), தேசிய துணைத் தலைவர் புரந்தேஸ்வரி (ஆந்திரா), தேசிய துணைத் தலைவர் அப்துல்லா குட்டி (கேரளா), துணைப் பொதுச்செயலாளர் அருணா (தெலங்கானா) ஆகியோரின் பெயர்கள் முதல்கட்டமாக பரிசீலிக்கப்பட்டது. இதில் சி.டி.ரவிக்கும், புரந்தேஸ்வரிக்கும் ஏற்கெனவே தமிழகத்தில் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது.

அதிலும் சி.டி.ரவிக்கு தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பியூஷ் கோயல், முரளிதர் ராவ் பொறுப்பாளராக இருந்த காலத்தில் அவர்களுடன் துணை பொறுப்பாளராக பணியாற்றியுள்ளார். மேலும் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தமிழக தேர்தல் பொறுப்பாளராக இருந்துள்ளார்.

தமிழக பாஜக துணைத் தலைவர்கள் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோருக்கு நெருக்கமானவர். எனவே சி.டி.ரவியை மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கலாம் என பெரும்பாலான நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்" என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x