Published : 14 Oct 2020 07:49 AM
Last Updated : 14 Oct 2020 07:49 AM
ஆளில்லா விமானங்கள் (டிரோன்) தற்போது காவல் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும் டைரக்டர் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேஷனிடம் (டிஜிசிஏ) இருந்து டிரோன் பறக்க அனுமதி பெற வேண்டும்.
அந்த வகையில், ‘அக்ரிக்ஸ்1’ என்ற பெயரில் சிறிய வகை டிரோன்கள், ரிமோட் மூலம் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் உள்ள நுண்ணிய கேமராவால் பயிர்களை தாக்கும் கிருமிகளைக் கண்டுபிடித்து அதற்கேற்ப மருந்து தெளிக்க முடியும். இந்நிலையில், விவசாயிகள் இந்த டிரோன்களை விலைக்கு அல்லது தனியார் நிறுவனங்களிடம் வாடகைக்கு பெற்று பயன்படுத்தும் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அக்ரிக்ஸ்1 தயாரிக்கும் ஆம்னிபிரஸ்ண்ட் ரோபோர்ட் டெக்னாலஜிஸ்ட் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி ஆஷீஷ் சின்ஹா ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, "எங்கள் டிரோன்களை பறக்க விடுவதற்காக விவசாயிகள் மத்திய அரசின் டிஜிசிஏவிடம் அனுமதி பெறத் தேவையில்லை. நுண்ணியக் கிருமிகள் படரத் தொடங்கினால் இதன் உதவியால் உடனடியாகக் கண்டறிய முடியும். இதனால், அக்ரிக்ஸ்1 பயன்படுத்தும் விவசாயிகளுக்கு கூடுதலாக சுமார் 20 சதவீதம் வரை பலன் கிடைக்கும்" என்றார்.
எனினும், இந்த டிரோன்கள் சிறிய அளவிலான வயல்வெளிகளில் பயன்படுத்த முடியாது. எனவே, அதிக பரப்பளவிலான பயிர்களை வைத்திருக்கும் பெரும் விவசாயிகளுக்கு மட்டுமே இது பயன்படும். இவற்றை தற்போது தனியார் பெருநிறுவனங்கள் தெலங்கானாவில் உள்ள தங்களது வயல்வெளியின் பயிர்களில் பயன்படுத்தி வருகின்றன. கிருமி நாசினிகளை தெளிக்கும் வசதியை இந்த அக்ரிக்ஸ்1 டிரோன்களில் பொருத்தவும் முயற்சிக்கப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT