Last Updated : 13 Oct, 2020 05:50 PM

 

Published : 13 Oct 2020 05:50 PM
Last Updated : 13 Oct 2020 05:50 PM

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் கால்டன் சாப்மேன் காலமானார்: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இரங்கல்

கால்டன் அந்தோனி சாப்மேன்

பெங்களூரு

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் கால்டன் அந்தோனி சாப்மேன் மறைவுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் கால்டன் அந்தோனி சாப்மேன் திடீர் மாரடைப்பால் பெங்களூருவில் நேற்று காலமானார். அவருக்கு வயது 49.

பெங்களூருவில் உள்ள ஆஸ்டின் நகரை சேர்ந்த கால்டன் அந்தோனி சாப்மேன் (49). சிறுவயதில் இருந்தே கால்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருந்தார். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல்வேறு கோப்பைகளை வென்றுள்ளார். பின்னர் கொல்கத்தாவுக்கு இடம்பெயர்ந்த இவர் டாடா கால்பந்து அகாடமியில் இணைந்து தன்னை மேலும் மெருகேற்றிக் கொண்டார்.

1991ல் கிழக்கு வங்க அணிக்காகவும், 1993ல் மேற்கு வங்க அணிக்காகவும் விளையாடினார். இதில் திறம்பட செயல்பட்டதால் 1995ல் இந்திய கால்பந்து அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

2001-ம் ஆண்டு வரை இந்திய கால்பந்து அணிக்காக விளையாடிய கால்டன் அந்தோனி சாப்மேன் மிகச் சிறந்த மிட் ஃபீல்டராக விளங்கினார். 1997ல் இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக இருந்த இவர் தலைமையில் எஸ்.ஏ.எஃப்.எஃப். கோப்பையை இந்தியா வென்றது. 2001ல் சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர், டாடா கால்பந்து அகாடமி உள்ளிட்ட கிள‌ப்புகளில் பயிற்சியாளராக பணியாற்றினார்.

கடந்த ஆண்டு இதயக் கோளாறு ஏற்பட்டதால் கால்பந்து விளையாடுவதை குறைத்துக் கொண்டார். பெங்களூருவில் மனைவி ராய்ச்செல், மகள் ரூத், மகன் காரிக் உடன் வசித்து வ‌ந்தார்.

இந்நிலையில் நேற்று காலை கால்டன் அந்தோனி சாப்மேனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, வழியிலே அவரது உயிர் பிரிந்தது.

கால்டன் அந்தோனி சாப்மேன் மறைவுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, முன்னாள் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் ஐ.எம்.விஜயன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பெங்களூருவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கால்பந்து ஆட்ட வீரர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து நேற்று அவரது ‌உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x