Published : 13 Oct 2020 05:03 PM
Last Updated : 13 Oct 2020 05:03 PM
கோவிட்-19 குறித்த 21ஆவது உயர்மட்ட அமைச்சர்கள் குழுக் கூட்டம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் எஸ் பூரி, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் மன்சுக் லால் மாண்டவியா, சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே மற்றும் நிதி ஆயோக் திட்டத்தின் சுகாதார பிரதிநிதி டாக்டர் வினோத் கே பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஹர்ஷ வர்தன், கடந்த ஆறு மாதங்களாகக் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராளிகளுக்குத் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், இந்தியா தனது ஸ்திரமான நடவடிக்கைகளால் நோயின் தாக்கத்தைக் குறைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
"62,27,295 பேர் இந்தியாவில் கரோனாவிலிருந்து குணம் அடைந்துள்ளனர். இதனால் நாட்டில் குணமடைந்தவர்களின் சதவீதம் 86.88-ஆக உயர்ந்துள்ளது. உலகிலேயே இதுதான் அதிகமானது " என்று அவர் கூறினார்.
கரோனாவால் ஏற்படும் இழப்புகளில் உலகிலேயே மிகக் குறைந்த அளவான 1.53 சதவீதத்தில் இந்தியா இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். மேலும், "நாட்டில் உள்ள மருத்துவப் பரிசோதனை நிலையங்கள் 1927- ஆக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 1.5 மில்லியன் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 11 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன" என்று அமைச்சர் ஹர்ஷவர்தன் குறிப்பிட்டார்.
வரவிருக்கும் பண்டிகை காலங்களிலும் அதைத் தொடர்ந்த குளிர் மாதங்களிலும் கொவிட் சரியான நடத்தை முறையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் கோவிட் சரியான நடத்தை முறைக்கான மக்கள் இயக்க உறுதிமொழி பிரச்சாரத்தை துவக்கி இருக்கிறார் என்றும் அமைச்சர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT