Last Updated : 13 Oct, 2020 04:02 PM

6  

Published : 13 Oct 2020 04:02 PM
Last Updated : 13 Oct 2020 04:02 PM

செல்வந்தர் பெண்ணாக இருந்திருந்தால் குடும்பத்தார் அனுமதியின்றி உடலை எரிப்பீர்களா?- ஹாத்ரஸ் வழக்கில் உ.பி.காவல்துறையிடம் உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

புதுடெல்லி

ஹாத்ரஸில் கூட்டு பலாத்காரத்தால் பலியான பெண்ணின் வழக்கு உத்தரப் பிரதேச உயர் நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. அதன் நீதிபதிகள், செல்வந்தர் பெண்ணாக இருந்திருந்தால் அனுமதியின்றி உடலை எரித்திரிப்பீர்களா? என சராமரியாக உ.பி. காவல்துறையிடம் கேள்வி எழுப்பினர்.

உ.பி.யின் ஹாத்ரஸில் கடந்த செப்டம்பர் 14 இல் தலித் குடும்பத்து 19 வயது பெண் கூட்டு பலாத்காரத்திற்கு பின் தாக்கப்பட்டார். இதனால், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர் பலனின்றி டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் செப்டம்பர் 29இல் பலியானார்.

இதன் பிறகு அப்பெண்ணிற்கு நீதி கேட்டு பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் ஹாத்ரஸில் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால், உ.பி.யின் உயர் நீதிமன்றம் இவ்வழக்கை தானாக முன்வந்து பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

லக்னோ அமர்வின் நீதிபதிகள் முன்னிலையில் விசாரிக்கப்பட்ட வழக்கில் பலியான பெண்ணின் குடும்பத்தார் ஆஜராகி இருந்தனர். இதில், தம் பெண்ணின் முகத்தை கடைசி முறையாகக் கண்டு எந்த சடங்குகளும் செய்ய அனுமதிப்படவில்லை எனத் தெரிவித்தனர்.

தங்கள் அனுமதியின்றியே ஹாத்ரஸ் போலீஸார் உடலை எரித்ததாகவும் தெரிவித்தனர். புனித கங்கை நதியின் நீரை ஊற்றி சடங்குகள் செய்வதற்கு பதிலாக பெட்ரோல் மற்றும் கெரசீன் ஊற்றி உடலை எரித்ததாகவும் புகார் கூறினர்.

ஹாத்ரஸ் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளரும் நேரில் ஆஜராகி இருந்தனர். இதற்கு ஹாத்ரஸ் மாவட்ட நிர்வாகம் சார்பில் அளித்த பதிலில் அதிகரித்த கூட்டத்தின் பாதுகாப்பு காரணமாக இதுபோல் செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர்.

இவ்வழக்கில் உ.பி. காவல்துறையின் உயர் அதிகாரிகளிடம் உயர் நீதிமன்ற நீதிபதி சராமரி கேள்விகளை எழுப்பினார். அதில், செல்வந்தர் பெண்ணாக இருந்திருந்தால் இவ்வாறு குடும்பத்தார் அனுமதியின்றி உடலை எரித்திருப்பீர்களா? எனக் கேள்வி எழுப்பினார்.

குடும்பத்தாருக்காக நீதிபதிகள் முன்னிலையில் ஆஜரான பிரபல வழக்கறிஞர் சீமா, பாதிக்கப்பட்ட குடும்பத்தாரின் சார்பில் 3 கோரிக்கைகளை வைத்தார். சிபிஐ விசாரணையின் முடிவை இவ்வழக்கு முடியும் வரை வெளியிடக் கூடாது எனக் கேட்டுக் கொண்டார்.

மற்ற இருகோரிக்கைகளில் இந்த வழக்கை உ.பி.க்கு வெளியே விசாரிக்கப்பட வேண்டும் எனவும் அது முடியும் வரை குடும்பத்தார் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நீதிபதி பங்கஜ் மித்தல் மற்றும் நீதிபதி ராஜன் ராய் ஆகியோர் முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இதன் அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 2 ஆம் தேதிக்கு நீதிமன்ற அமர்வு ஒத்தி வைத்தது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x