Published : 13 Oct 2020 03:46 PM
Last Updated : 13 Oct 2020 03:46 PM
பிரசவம் முடிந்தபிறகு 14 நாட்களில் பச்சிளம் குழந்தையோடு மீண்டும் பணியில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரிக்குப் பொதுமக்கள் தரப்பில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நோடல் அதிகாரியாகப் பணிபுரிந்து வரும் ஐஏஎஸ் அதிகாரி செளம்யா பாண்டே. கோவிட் தொடர்பான பணிகளுக்காகக் கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார்.
கர்ப்பணியாக இருந்துகொண்டே கரோனா மேலாண்மைப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்ட செளம்யா, பிரசவத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக விடுமுறைக்கு விண்ணப்பித்தார். ஒரு வாரத்தில் பெண் குழந்தை பிறக்க, மீண்டும் 14 நாட்கள் விடுமுறையை எடுத்துக்கொண்டார். தற்போது தன்னுடைய பெண் குழந்தையுடன் மீண்டும் பணியில் இணைந்துள்ளார்.
இதுகுறித்து செளம்யா பாண்டே ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, ’’நான் ஐஏஎஸ் அதிகாரி என்பதால், என்னுடைய வேலையையும் கவனிக்க வேண்டும். குழந்தைப் பிறப்புக்கும் அந்தக் குழந்தையை வளர்ப்பதற்குமான மனோதிடத்தை, வலிமையைக் கடவுள் பெண்களுக்குக் கொடுத்திருக்கிறார்.
இந்திய கிராமப் புறங்களில் பெண்கள் பிரசவ நாள் வரை வேலை செய்வார்கள். குழந்தை பிறந்த சில தினங்களில் மீண்டும் வேலையைத் தொடர்வார்கள். அந்த வகையில் நானும் என்னுடைய மேலாண்மைப் பணியைக் கவனிக்க ஆரம்பித்துள்ளேன். இதற்கு என்னுடைய குடும்பத்தினரின் ஆதரவும் முக்கியக் காரணம்’’ என்றார் செளம்யா பாண்டே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT