Published : 13 Oct 2020 03:12 PM
Last Updated : 13 Oct 2020 03:12 PM
மொபைல் போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சைப் பசு சாணத்தால் தயாரிக்கப்படும் சிப் குறைக்கும் என்று தேசிய காமதேனு ஆயோக் தலைவர் வல்லபாய் கதிரியா தெரிவித்துள்ளார்.
வரும் தீபாவளிப் பண்டிகையின்போது, 11 கோடி குடும்பங்களில் பசு சாணத்தால் செய்யப்பட்ட 33 கோடி விளக்குகளை ஏற்றவைக்க, தேசிய காமதேனு ஆயோக் திட்டமிட்டுள்ளது. இதற்காக பஞ்சகவ்யப் பொருட்களைப் பயன்படுத்தித் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் 'காமதேனு தீபாவளி அபியான்' பிரச்சாரத்தைத் தேசிய காமதேனு ஆயோக் தொடங்கியது.
இதற்கான அறிமுக விழாவில் தேசிய காமதேனு ஆயோக் தலைவர் வல்லபாய் கதிரியா கலந்துகொண்டார். இதில் பசு சாணத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சிப் ஒன்றை வல்லபாய் அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், ''பசு சாணம் அனைவரையும் காக்கும் திறன் கொண்டது. இதில் கதிர்வீச்சுக்கு எதிரான அம்சம் இருப்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த சிப்பை மொபைல் போன்களில் பயன்படுத்துவதன் மூலம் கதிர்வீச்சைக் குறைக்கமுடியும். இது நோய்களில் இருந்து மக்களைக் காக்கும்'' என்று தெரிவித்தார்.
'கவுசத்வா கவாச்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிப், ராஜ்கோட்டைச் சேர்ந்த ஸ்ரீஜீ கவுசாலாவால் தயாரிக்கப்பட்டுள்ளது.
2019-ல் உருவாக்கப்பட்ட தேசிய காமதேனு ஆயோக் அமைப்பு, பசுக்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டது. மத்திய மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளர்ப்பு அமைச்சகத்தின் கீழ் இந்த அமைப்பு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT