Published : 12 Oct 2020 06:25 PM
Last Updated : 12 Oct 2020 06:25 PM
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவில் முதியோர், 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் என 52 ஆயிரம் பேர் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
''பிஹாரில் உள்ள 243 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டங்களாக நடக்கிறது. நவம்பர் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு 71 தொகுதிகளுக்கு வரும் 28-ம் தேதி நடக்கிறது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக உடல்நலமில்லாதவர்கள், முதியோர், 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் வாய்ப்பளித்துள்ளது.
இதன்படி தேர்தல் நடக்கும் 16 மாவட்டங்களில் 71 தொகுதிகளைச் சேர்ந்த வாக்குப்பதிவு அதிகாரிகள் 2 பிரிவுகளாக 4 லட்சம் வாக்காளர்களின் பட்டியலை அளித்தனர். இதில் 52 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் நேரடியாக வாக்குப்பதிவு மையத்துக்குச் சென்று வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தபால் வாக்கிற்கு ஒப்புக்கொண்டவர்களுக்கு ஒரு தேதி வழங்கப்படும். அந்தத் தேதியில் தேர்தல் அதிகாரிகள், பாதுகாப்புடன் வந்து, வீடியோ பதிவில் வாக்குகளைப் பதிவு செய்து செல்வார்கள். இதில் மிகுந்த வெளிப்படைத்தன்மையோடு செயல்பாடுகள் இருக்கும்.
பிஹார் மாநிலத்தில் அடுத்து நடக்க இருக்கும் இருகட்டத் தேர்தல்களிலும் இதே நடைமுறை தொடரும். கரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் மிகவும் பாதுகாப்பாகவும், வாக்காளர்களுக்கு எந்தவிதமான சிரமமும் இன்றியும் வாக்களிக்க வசதி செய்யப்படும்.
தேர்தல் பூத் அதிகாரிகள் அடுத்த 2 கட்டத் தேர்தலுக்காக 12 லட்சம் வாக்காளர்கள் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று அவர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்த உதவி செய்வார்கள்''.
இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிஹாரில் 2-ம்,3-ம் கட்டத் தேர்தல் நவம்பர் 3, 7-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. போலீஸார், அரசு அதிகாரிகளுக்குப் பதிவு செய்யும் சர்வீஸ் வாக்குகளை விட தபால் வாக்குகள் வித்தியாசமாக இருக்கும்.
தபால் மூலம் வாக்களிக்க விரும்புவோர் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் அளித்தால், தபால் வாக்குப்பதிவின்போது வீ்ட்டுக்கே வந்து வாக்குப்பதிவு செய்யப்படும். அப்போது வீடியோவில் அனைத்து நடைமுறைகளும் பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT