Last Updated : 12 Oct, 2020 05:42 PM

 

Published : 12 Oct 2020 05:42 PM
Last Updated : 12 Oct 2020 05:42 PM

கோவிட்டைக் கையாள்வதில் கர்நாடக அரசு தோல்வி; சுகாதாரத்துறை அமைச்சர் மாற்றப்பட்டதே அதற்குச் சான்று: காங்கிரஸ் விமர்சனம்

பி.எஸ்.எடியூரப்பா

பெங்களூரு

கோவிட்டைக் கையாள்வதில் ஆளும் கர்நாடக பாஜக அரசின் தோல்விக்கு அமைச்சரவை மறுசீரமைப்பே சான்றாகும் என கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே.சிவக்குமார் விமர்சித்துள்ளார்.

கர்நாடகாவில் இதுவரை 7,10,309 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து 5,80,054 பேர் மீண்டு குணமடைந்துள்ள நிலையில் மாநிலத்தில் மொத்தம் 9,966 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். தற்போது கரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ள 1,20,270 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மாநில பாஜக அமைச்சரவை மறுசீரமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை பி.ஸ்ரீராமுலுவிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. தற்போது அத்துறை மருத்துவக் கல்வி அமைச்சராக உள்ள கே.சுதாகருக்கு ஒதுக்கப்பட்டது.

''கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தனது அமைச்சரவையைச் சீரமைத்தது, சுகாதாரத் துறை அமைச்சர் மாற்றப்பட்டது, கோவிட்டைக் கையாள்வதில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த அரசாங்கத்தின் மோசமான தோல்விக்குச் சான்றாகும்'' என கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், ''கோவிட் தொற்றுநோயைக் கையாள்வதில் இந்த அரசாங்கத்தின் பரிதாபகரமான தோல்விக்கு முதல்வர் @BSYBJP செய்த அமைச்சரவை மறுசீரமைப்பு ஒரு சான்றாகும். சுகாதாரத்துறை அமைச்சர் மாற்றப்பட்டார் என்பது எங்கள் குற்றச்சாட்டுக்கு நம்பகத்தன்மையைச் சேர்க்கிறது. இந்த அரசாங்கத்தின் திறமையின்மை மிகப்பெரிய அளவில் மக்களின் உயிர் மற்றும் வாழ்வாதாரத்தை இழக்க வழிவகுத்தது'' என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x