Published : 12 Oct 2020 01:55 PM
Last Updated : 12 Oct 2020 01:55 PM
லடாக், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 44 பாலங்களை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நாட்டுக்குஅர்ப்பணித்தார்.
டெல்லியில் இருந்தவாறு காணொலி மூலம் நடந்த இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் தலைமை அதிகாரி பிபின் ராவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
எல்லைச் சாலை அமைப்பு சார்பில் கட்டப்பட்டுள்ள இந்த 44 பாலங்களும் மிக முக்கியமானவை. குறிப்பாக லடாக் எல்லைப் பகுதியில் 7 பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பாலங்கள் மூலம் எல்லையில் ராணுவ வீரர்களுக்குத் தேவையான பொருட்களை, தளவாடங்களை விரைவாகக் கொண்டு செல்ல இயலும்.
லடாக் எல்லையில் சீன ராணுவத்துக்கும், இந்திய ராணுவத்துக்கும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தப் பாலங்கள் திறக்கப்பட்டு, நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாமல் இமாச்சலப் பிரதேசத்தில் தார்ச்சாவிலிருந்து லடாக்கை இணைக்கும் பாதை அமைக்கும் பணியும் தற்போது நடந்து வருகிறது. 290 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படும் சாலை முழுமையாக முடிந்துவிட்டால், லடாக் பகுதியிலிருந்து கார்கில் பகுதிக்கு எளிதாகச் செல்ல முடியும்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
''நம்முடைய வடக்கு மற்றும் கிழக்கு எல்லையில் என்ன மாதிரியான சூழல் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். முதலில் பாகிஸ்தான், தற்போது சீனாவால், எல்லையில் பிரச்சினை உருவாகியுள்ளது. இந்த இரு நாடுகளுடன் 7 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு எல்லைகளை நம் நாடு கொண்டுள்ளது. அந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.
பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையின் தலைமையால், இந்தப் பிரச்சினைகளை வலிமையாக அணுகுவதோடு, எல்லைப் பகுதிகளில் மிகப்பெரிய வரலாற்று மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளது.
எல்லைப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள இந்த 44 பாலங்களால் ராணுவத்துக்கு மட்டுமின்றி, பொதுமக்களும் எளிதாகச் சென்று வர முடியும். போக்குவரத்துப் பகுதிகளில் நமது ராணுவத்தினர் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். இப்பகுதிகளில் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டிருப்பது ராணுவத்தினருக்குப் பெருமளவு உதவும்.
ராஜாங்க ரீதியாக இந்தச் சாலைகள் உதவுவதோடு, நாட்டின் வளர்ச்சியில் அனைவருக்கும் பங்கு இருப்பதையும் பிரதிபலிக்கிறது. எல்லைச் சாலை அமைப்பு தொடர்ந்து உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகளில் சாலை அமைக்கும் பணியைச் செய்து வருகிறது.
கடந்த 2 ஆண்டுகளில் எல்லைச் சாலை அமைப்பின் மூலம் கடினமான மலைப்பகுதிகளில் 2,200 கி.மீ. தொலைவுக்குப் புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்''.
இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT