Published : 12 Oct 2020 12:35 PM
Last Updated : 12 Oct 2020 12:35 PM
மணிக்கு 130 கி.மீ. வேகம் மற்றும் அதற்கு அதிகமாகச் செல்லும் அதிவேக ரயில்களில் குளிர்சாதன வசதி அல்லாத பெட்டிகள் அகற்றப்பட்டு, ஏ.சி.பெட்டிகள் மட்டுமே எதிர்காலத்தில் பொருத்தப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
அதேசமயம், மணிக்கு 110 கி.மீ. வேகம் வரை செல்லும் ரயில்களில் வழக்கம்போல் குளிர்சாதன வசதி இல்லா படுக்கை வசதி கொண்ட, இருக்கை கொண்ட பெட்டிகள் அகற்றப்படாது. அனைத்து ஏ.சி. அல்லாத பெட்டிகளும் ஏ.சி. பெட்டிகளாக மாற்றப்படும் என்று அர்த்தம் இல்லை என்று ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் டி.ஜே.நரைன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
''ரயில் போக்குவரத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. இதன்படி, எதிர்காலத்தில் மணிக்கு 130 கி.மீ. வேகம் மற்றும் அதற்கு அதிகமான வேகத்தில் செல்லும் ரயில்களில் ஏ.சி. அல்லாத பெட்டிகள் அகற்றப்படும். முழுமையாக ஏ.சி. பெட்டிகள் மட்டுமே பொருத்தப்படும். இந்த ரயில்களில் அனைவரும் செல்லும் வகையில் நியாயமான விலையில்தான் டிக்கெட் இருக்கும்.
அதற்காக அனைத்து ரயில்களிலும் ஏ.சி. அல்லாத பெட்டிகள் அகற்றப்படும் என அர்த்தமில்லை. 130 கி.மீ. வேகம், அதற்கு அதிகமான வேகத்தில் உள்ள ரயில்களில் மட்டும்தான் இந்த மாற்றம்.
தற்போது இயக்கப்பட்டு வரும் ஸ்பீட் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றின் வேகம் மணிக்கு 110 கி.மீ., அதற்கும் குறைவாக இருக்கிறது. அந்த ரயில்களில் வழக்கம் போல் ஏ.சி. அல்லாத பெட்டிகள் இருக்கும்.
ராஜ்தானி , துரந்தோ, சதாப்தி, ஜன்சதாப்தி ஆகிய ரயில்கள் முக்கிய மெட்ரோ நகரங்களை இணைக்கும் கோல்டன் குவாட்ரிலேட்ரல் வழிப்பாதையில் 120 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகின்றன. இந்தத் தடத்தில் ரயில்கள் வேகம் 130 கி.மீ. முதல் 160 கி.மீ. வேகம் வரை உயர்த்தப்படும்போது இந்தச் சாதாரணப் பெட்டிகள் மாற்றப்பட்டு, ஏசி பெட்டிகளாகத் தரம் உயர்த்தப்படும்.
பொதுவாக மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் ரயில்கள் செல்லும்போது, ரயில் பெட்டிகளில் ஏ.சி. வசதி இருத்தல் அவசியமானது. அதிவேக ரயில்களில் பெட்டிகளைத் தரம் உயர்த்தும் பணிகளில் ரயில்வே தீவிரமான பணிகளைச் செய்து வருகிறது. ஆனால், மணிக்கு 110 கி.மீ. வேகம் வரை செல்லும் ரயில் பெட்டிகளில் வழக்கம்போல் சாதாரண பெட்டிகள் இருக்கும். அது நீக்கப்படாது.
இந்த ஏ.சி. பெட்டிகளில் டிக்கெட்டுகள் மக்கள் எளிதாக வாங்கக்கூடிய விலையில்தான் இருக்கும். 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளுக்கும், ஏ.சி. அல்லாத படுக்கை வசதியுள்ள பெட்டிகளுக்குமான டிக்கெட் கட்டணத்துக்கும் இடைப்பட்டதாகவே இருக்கும்.
இதற்கான ஏ.சி. பெட்டிகள் கபூர்தலாவில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலையில் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு 100 பெட்டிகளும், அடுத்த ஆண்டு 200 பெட்டிகளும் செய்யப்படும். சாதாரண படுக்கை உள்ள பெட்டிகளில் 73 படுக்கைகள் இருக்கும். இதில் 83 படுக்கைகள் இருக்கும். நடுவில் வரும் படுக்கை இருக்காது''.
இவ்வாறு நரேன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT