Published : 12 Oct 2020 12:13 PM
Last Updated : 12 Oct 2020 12:13 PM
ஈகோ காரணமாகவே மும்பையின் ஆரே காலனியிலிருந்து வேறொரு இடத்திற்கு மெட்ரோ ரயில் ஷெட் இடமாற்றம் செய்யப்பட ரூ.4,000 கோடி வீண் செலவு செய்ய சிவசேனா திட்டமிட்டுள்ளது என்று தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிராவின் முந்தைய பாஜக ஆட்சியில் மும்பை மெட்ரோ ரயில் திட்டப் பணி தொடங்கப்பட்டது. ஆரே காலனியில் மெட்ரோ ரயில் ஷெட் அமைக்க முற்பட்டபோது வனப்பகுதிகளை அழிப்பதாக சமூக ஆர்வலர்களும் குடியிருப்பாளர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். எதிர்ப்பை மீறி இப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. எனினும் சில மாதங்களுக்கு முன்னர் மெட்ரோ ரயில் ஷெட் பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.
மும்பை மெட்ரோ ரயில் ஷெட் இடமாற்றம் குறித்து நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, ஆரே மெட்ரோ ரயில் ஷெட் அகற்றப்படுவதாகவும் இந்தத் திட்டம் இப்போது புறநகர் கஞ்சூர்மார்க்கில் உள்ள ஒரு அரசு நிலத்திற்கு மாற்றப்படும் என்றும், இதற்காக எந்தச் செலவும் ஏற்படாது என்றும் கூறினார்.
இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று தனது ட்விட்டர் பக்கங்களில் அடுத்தடுத்து தனது கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.
தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளதாவது:
''சிவசேனா தலைமையிலான மகாராஷ்டிர அரசு மெட்ரோ ரயில் ஷெட் திட்டத்தை நகரின் நுரையீரலான ஆரே காலனியில் இருந்து மும்பையின் கஞ்சூர்மார்க்கிற்கு மாற்ற முடிவு செய்திருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அதுவும் தனது ஈகோவைப் பூர்த்தி செய்வதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த இடமாற்றத்திற்கான செலவு குறைந்தது 4,000 கோடி அதிகரிக்கும் என்று இந்த அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழுவால் மதிப்பிடப்படுகிறது.
2019 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, பாஜகவின் முன்னாள் தோழமைக் கட்சியாக இருந்தபோது, சிவசேனா இந்தத் திட்டத்தை நகரின் முக்கிய பசுமைக் காலனியில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறி எதிர்த்தது. அதனால் கஞ்சூர்மார்க் தளம் முன்னர் எங்கள் அரசாங்கத்தால் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், அது வழக்கில் இருந்ததால் உயர் நீதிமன்றத்தால் நிறுத்தப்பட்டது. யாருடைய ஆட்சிக் காலத்தில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்டன? ஒருவரின் ஈகோவைப் பூர்த்தி செய்வதற்காக ஏன் இவ்வளவு பெரிய சுமை? இந்த அரசாங்கம் யாருக்கு கஷ்டப்பட விரும்புகிறது? எதற்காக?
சில தனியார் நபர்கள் சிலர் தங்கள் இடங்களுக்கான உரிமைகளைக் கோரினர். மெட்ரோ ரயில் ஷெட் திரும்பப் பெறுமாறும் அவர்கள் கோரினர். எதிர்காலத்தில் உரிமை கோரல்கள் தீர்க்கப்பட்டால் அந்தத் தொகை டெபாசிட் செய்யப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் விரும்பியது. இந்தத் தொகை 2015 ஆம் ஆண்டில் சுமார் 2,400 கோடியாக இருந்தது. அந்த வழக்கின் இன்றைய நிலை என்ன? இவ்வழக்கை யாராவது உச்ச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லும்பட்சத்தில் திட்டம் தாமதமானால் அதற்கு யார் பொறுப்பு?
கஞ்சூர்மார்க்கில் உள்ள இடம் ஒரு சதுப்பு நிலமாக இருப்பதால், அந்நிலத்தை உறுதிப்படுத்த குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் தேவைப்படும்.
இத்திட்டம் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டிருந்தால், இது அடுத்த ஆண்டு மும்பைக்காரர்களின் சேவையில் இருந்திருக்கும். இப்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆரே காலனியில் ரூ.400 கோடி ஏற்கெனவே மெட்ரோ ரயில் ஷெட்டுக்காகச் செலவிடப்பட்டது, திட்டத்தைக் கிடப்பில் போட்டதால் ரூ.1,300 கோடி வீணாகியுள்ளது.
தற்போது மெட்ரோ ரயில் ஷெட் இடம் மாற்றும் திட்டத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி கூடுதல் செலவு ஆகும் என அதிகாரிகளே தெரிவிக்கின்றனர். மும்பைக்காரர்களின் தடையற்ற பயணத்தைத் தடுப்பதன் பின்னால் உள்ள அரசாங்கத்தின் நோக்கம் என்ன? மகா விகாஸ் அகாடி அரசாங்கம் மும்பைக்காரர்களை தவறாக வழிநடத்துகிறது.''
இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT