Published : 11 Oct 2020 08:34 AM
Last Updated : 11 Oct 2020 08:34 AM
சாதாரண பக்தரை போல அலிபிரி மலைப்பாதை வழியாக நடந்து சென்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக கே.எஸ். ஜவஹர் ரெட்டி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருமலை திருப்பதி தேவஸ் தானத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக, மூத்த ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் கே.எஸ். ஜவஹர் ரெட்டி நேற்று பொறுப்பேற்றார். ஆந்திர மாநில சுகாதாரம் மற்றும் மருத்துவ துறையில் முதன்மை செயலாளராக பதவி வகித்து வந்த இவர், திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை நிர்வாகஅதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து நேற்று காலையில் திருப்பதி அலிபிரி மலைவழிப்பாதை வழியாக நடந்து திருமலைக்கு சென்றார் ஜவஹர் ரெட்டி. திருமலையில் தேவஸ்தான அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.
அதன் பின்னர், இவர், தனது குடும்பத்தாருடன் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் வழியாக சாதாரண பக்தரை போல கோயிலுக்குள் சென்றார். அங்கு அவருக்குஜீயர்கள், வேத பண்டிதர்கள்பூரண கும்ப மரியாதை அளித்தனர். பிறகு சுவாமி தரிசனம் செய்த ஜவஹர் ரெட்டிக்கு, ரங்கநாயக மண்டபத்தில், கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிறகு அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கோயிலுக்கு வெளியே வந்த தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறும்போது, "நான் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கால்நடை பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பு படித்தேன். அதன் பின்னர் ஐஏஎஸ் தேர்வுக்கு படித்து அதிகாரியானேன். சிறு வயதிலிருந்தே ஏழுமலையானின் தீவிர பக்தன். நான் தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்று சுவாமிக்கு சேவை செய்ய பல முறை முயற்சித்தேன். அது இம் முறை சாத்தியமானது. இது என் பாக்கியம். சாமானிய பக்தர்களின் குறைகளை தீர்ப்பேன்" என்றார்.
17-ல் திருச்சானூர் பிரம்மோற்சவம்
வரும் 16-ம் தேதி முதல் திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க உள்ளது. இதற்கு மறுநாள், 17-ம் தேதி திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலிலும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
இம்முறை கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதத்தில், இந்த பிரம்மோற்சவம் ஏகாந்தமாக நடத்தப்பட உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித் துள்ளது. தாயாரின் நவராத்திரி பிரம்மோற்சவ விழா, வரும் 25-ம்தேதி நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT