Published : 11 Oct 2020 07:08 AM
Last Updated : 11 Oct 2020 07:08 AM

சீன அரசின் நிதியுதவி பெறும் ஹுவாய் நிறுவனத்திடம் இருந்து 5-ஜி தொழில்நுட்பத்தை வாங்குவது அபாயம்: `ரா’ அமைப்பின் முன்னாள் தலைவர் எச்சரிக்கை

புதுடெல்லி

சீனாவின் ஹுவாய் நிறுவனத்திடம் இருந்து 5-ஜி தொழில்நுட்பத்தை இந்தியா வாங்குவது மிகுந்த அபாயகரமானது என்று `ரா’ அமைப்பின் முன்னாள் தலைவர் விக்ரம் சூட் எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் 5-ஜி அலைக்கற்றைக்கான ஒதுக்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்க அரசு தயாராகி வரும் நிலையில், `ரா’ அமைப்பின் முன்னாள் தலைவர் இந்தக் கருத்தை கூறியுள்ளார்.

விக்ரம் சூட் சமீபத்தில் வெளியிட்டுள்ள புத்தகத்தில், சீனாவின் ஹுவாய் ஒரு தனியார் நிறுவனம் போல காட்டிக் கொள்ளலாம். ஆனால், ஹுவாய் சீன அரசால் நிதி உதவி அளிக்கப்பட்டு வரும் நிறுவனம் என்பதும், அமெரிக்காவில் இந்நிறுவனம் அறிவுசார் சொத்துகளைத் திருடியதாக நிரூபிக்கப்பட்டிருப்பதும் வர்த்தக உலகில் உள்ள அனைவருக்குமே தெரியும்.

ஹுவாய் நிறுவனம் உத்தி ரீதியிலும், தொழில்நுட்ப ரீதியிலும், புவிஅரசியல் சார்ந்தும், சட்ட ரீதியாகவும் அபாயகரமானதாகவே இருக்கிறது. அதுவும் கரோனா பாதிப்புக்குப் பின் சீனாவின் மீதான பயத்தை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது.

சீனா குறித்த ஒவ்வொரு விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனவே, சீன நிறுவனமான ஹுவாய் இந்தியாவில் 5-ஜி தொழில்நுட்பத்தை விற்பதன் மூலம் என்னவெல்லாம் திட்டமிட்டிருக்கிறது என்பது மிகவும் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.

அரசு ரகசியங்களைத் திருடுவது என்பது உளவுத் துறையின் முறையான ஒரு நடவடிக்கையாகும். இந்தியாவுடனான சீனாவின் புவி அரசியல் சார்ந்த விரோதப் போக்கு நீடித்து வரும் நிலையில் ஹுவாய் மூலமாக திட்டங்களைத் தீட்டுவதற்கு விரும்பலாம். எனவே, ஹுவாய் நிறுவனத்தை அனுமதிப்பது குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டி இருக்கிறது.

சீனா குறித்து சர்வதேச அளவிலேயே பார்வை மாறியிருக்கிறது. நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சீன அரசும், சீன நிறுவனங்களும் செயல்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு நிலவுகிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் இதுதொடர்பாக பெரும் பிரச்சினை நிலவி வருகிறது. எனவே சீனா பொறுப்புள்ள நாடு என்பதை உலகுக்கு நிரூபிக்க வேண்டியிருக்கிறது.

இந்தியா மீதான சீனாவின் விரோத போக்கு மாறவில்லை எனில் சீனாவிடம் இருந்து வரும் எந்த சலுகையையும் இந்தியா தவிர்ப்பது நல்லது என்று விக்ரம் சூட் எச்சரித்துள்ளார்.

`ரா’ அமைப்பின் முன்னாள் தலைவர் விக்ரம் சூட் தற்போது டெல்லியில் செயல்பட்டு வரும் சுயாதீன அரசு கொள்கைகள் குறித்த ஆய்வு நிறுவனத்தின் ஆலோசகராக உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x