Published : 10 Oct 2020 04:35 PM
Last Updated : 10 Oct 2020 04:35 PM
பிரதமர் மோடி பயணிக்க ரூ.8400 கோடியில் விமானம் வாங்கப்பட்டுள்ளது. ஆனால், எல்லையில் ராணுவ வீரர்கள் செல்வதற்கு குண்டு துளைக்காத வாகனங்கள் இல்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் உள்ளிட்ட விவிஐபிக்கள் பயணிக்க அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து பி 777 ரகத்தைச் சேர்ந்த 2 விமானங்கள் ரூ.8,400 கோடியில் வாங்கப்பட்டன.
விவிஐபிக்களுக்காக வாங்கிய விமானங்கள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மத்திய அரசை விமர்சித்து வருகிறார்.
ராகுல் காந்தி நேற்று வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், “விமானம் வாங்குவதற்காக பிரதமர் மோடி ரூ.8,400 கோடி செலவு செய்துள்ளார். ஆனால், சியாச்சின், லடாக் எல்லையில் தேசத்தைப் பாதுகாக்கும் நமது ராணுவ வீரர்களுக்குத் தேவையான பொருட்களை விமானம் வாங்கப்பட்ட தொகையில் வாங்கியிருக்கலாம்.
குளிருக்கான 30 லட்சம் ஆடைகள், 60 லட்சம் ஜாக்கெட், கையுறை , 67 லட்சத்து 20 ஆயிரம் ஷூக்கள், 16 லட்சத்து 80 ஆயிரம் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை விமானம் வாங்கிய தொகையில் வீரர்களுக்காக வாங்கியிருக்கலாம். பிரதமர் மோடி தன்னுடைய தோற்றத்தைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்கிறார். ராணுவ வீரர்களைப் பற்றிய கவலை அவருக்கில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் 2 நிமிடங்கள் ஓடும் வீடியோவைப் பதிவிட்டு பிரதமர் மோடி உள்ளிட்ட விவிஐபிக்களுக்காக வாங்கப்பட்ட விமானம் குறித்து விமர்சித்துள்ளார்.
அந்த வீடியோவில் இரு வீரர்கள் பேசிக்கொண்டிருப்பது போன்று இருக்கிறது. அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது, எங்கு எடுக்கப்பட்டது என்ற தகவலும் இல்லை.
அதில் இரு வீரர்களும் பேசுகையில், “நம்மை இப்படி குண்டு துளைக்காத வாகனத்தில் அனுப்புகிறார்கள். நாம் செல்லும் இடத்தில் குண்டு துளைக்காத வாகனம் இருந்தாலும் கூட அது நம்மைப் பாதுகாக்க போதுமானதாக இருக்காது. நம்முடைய வாழ்க்கை மிகவும் ஆபத்தானது.
நம்முடைய வாழ்க்கையையும், குடும்பத்தாரையும் அதிகாரிகள் பணயம் வைக்கிறார்கள்” எனக் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
இந்த வீடியோவைக் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பதிவிட்ட கருத்தில், “இது நியாயமா? நம்முடைய எல்லையைக் காக்கும் வீரர்கள் தியாகிகளாக மாறவும், வீர மரணம் எய்தவும், அவர்கள் செல்வதற்கு குண்டு துளைக்காத வாகனங்கள் தரப்படவில்லை. ஆனால், பிரதமர் மோடி பயணிக்க ரூ.8,400 கோடியில் விமானம் வாங்கப்பட்டுள்ளது. இது நியாயமா?’’ என ராகுல் காந்தி கேட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT