Published : 10 Oct 2020 04:00 PM
Last Updated : 10 Oct 2020 04:00 PM
சில தொலைக்காட்சி சேனல்கள், டிஆர்பி ரேட்டிங் புள்ளிகளில் மோசடி செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பாக தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்றக் நிலைக்குழு விசாரணை நடத்தலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், நிலைக்குழுவின் தலைவர் காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து, சசி தரூர் எம்.பி. தலைமையிலான குழுவும் விசாரிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போலியாக டிஆர்பி ரேட்டிங் புள்ளிகளைக் காட்டி விளம்பர வருவாய் பெற்றதாக 2 பேரை மும்பை போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக 2 மராத்திய சேனல்கள், ரிபப்ளிப் சேனல் ஆகியவற்றை மும்பை போலீஸார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக ரிபப்ளிக் சேனலின் தலைமை நிதி அதிகாரி சுப்பிரமணியம் சுந்தரத்தையும் விசாரணைக்கு ஆஜராக மும்பை போலீஸ் ஆணையர் சம்மன் அனுப்பியுள்ளார். இரு மராத்திய சேனல் நிர்வாகிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் , தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “ டிஆர்பி ரேட்டிங் மோசடி விவகாரத்தை நாடாளுமன்றத்தின் தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு எடுத்து விசாரிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட சேனல்களின் நிர்வாகிகளை அழைத்து விளக்கம் கேட்டு, தீர்வை அறிய வேண்டும்.
மத்திய அரசின் விளம்பரங்கள் அனைத்தும் டிஆர்பி ரேட்டிங் அடிப்படையில்தான் தரப்படுகின்றன. பொய்யான தகவலின் அடிப்படையில் மக்கள் பணம் செலவழிக்கக் கூடாது. டிவி சேனல்களுக்கு என தனி மதிப்பு இருக்கிறது. அதன் மதிப்புகள் மீது தற்போது கேள்வி எழுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு இந்த டிஆர்பி ரேட்டிங் விவகாரத்தைக் கையில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து, அது தொடர்பான ஆலோசனையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்.எம்.பி. மணிஷ் திவாரி கூறுகையில், “இந்த டிஆர்பி ரேட்டிங் விவகாரம் ஒளிபரப்புத் துறையை வீணாக்கிவிட்டது. குறிப்பாக செய்திச் சேனல்களை வீணடித்துவிட்டது. ஆதலால், இதை தீவிரமாகக் கருதி நாடாளுமன்ற நிலைக்குழு விசாரிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
தகவல் தொழில்நுட்பத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக சசி தரூர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஃபேஸ்புக் விவகாரத்தி்ல பாஜக எம்.பி.க்கள் சசி தரூரை நிலைக்குழு தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால், வெறுப்புணர்வு பேச்சு விவகாரத்தில் ஃபேஸ்புக் அதிகாரிகளை அழைத்து நிலைக்குழு முன் ஆஜராக வைத்து விசாரித்தார் சசி தரூர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT