Last Updated : 10 Oct, 2020 12:58 PM

2  

Published : 10 Oct 2020 12:58 PM
Last Updated : 10 Oct 2020 12:58 PM

பாலியல் வழக்குகளில் எப்ஐஆர்; 60 நாட்களில் விசாரணையை முடிக்க வேண்டும்: பெண்கள் பாதுகாப்பு குறித்து மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வழக்குகளி்ல் போலீஸார் கட்டாயமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணை 24 மணி நேரத்துக்குள் தேர்ந்த அரசு மருத்துவரிடம் பரிசோதனை செய்ய வேண்டும், 2 மாதத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று பெண்கள் பாதுகாப்பு குறித்து பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அளித்துள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம், ஹாத்ரஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயதுப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெண்களின் பாதுகாப்புக் குறித்து பெரும் சர்ச்சையை எழுப்பியது. பல்வேறு நகரங்களில் போராட்டம் நடந்தது. இதையடுத்து, இந்த உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

''பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் குற்றங்களில் போலீஸார் என்ன விதமான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது குறித்து அவ்வப்போது மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை வழிகாட்டு நெறிமுறைகளை அளித்து வருகிறது.

குறிப்பாக பெண் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க சட்ட வழிமுறைகளை மாநில அரசுகள் வலுப்படுத்த வேண்டும்.

அதாவது பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்தால் போலீஸார் கண்டிப்பாக சிஆர்பிசி 154 பிரிவு 1-ன் கீழ் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை பாதிக்கப்பட்ட பெண் சொந்த ஊரின் காவல் எல்லைக்கு அப்பால் பாதிக்கப்பட்டு அல்லது வேறு மாநிலத்தில் பாலியல் துன்பத்துக்கு ஆளாக்கப்பட்டு, சொந்த ஊர் காவல் நிலையத்தில் புகார் அளித்தால், போலீஸார் உடனடியாக ஜீரோ எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்.

பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் போலீஸார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய தாமதித்தாலோ அல்லது மறுத்தாலோ ஐபிசி பிரிவு 166-ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அது மட்டுமல்லாமல் உட்பிரிவு 326 ஏ,பி, பிரிவு 354,354 பி, 370, 376, 376ஏ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

சிஆர்பிசி பிரிவு173-ன் கீழ் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை போலீஸார் இரு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். வழக்குகளின் நிலவரம், விசாரணை விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஐடிஎஸ்எஸ்ஏ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த விசாரணை நிலவரம் கண்காணிக்கப்படும்.

பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள், பெண் குழந்தைகள் சிஆர்பிசி பிரிவு164-ன் கீழ் குற்றம் நடந்த 24 மணி நேரத்துக்குள் பதிவு பெற்ற அரசு மருத்துவரிடம் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர் இறக்கும் தறுவாயில் இருந்தால், வாக்குமூலத்தை எழுத்து மூலமோ அல்லது வாய்மொழியாகவோ கேட்டு இந்திய ஆதாரச் சட்டம் 1872 பிரிவு 32(1) ன் கீழ் போலீஸார் பதிவு செய்ய வேண்டும்.

பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து தடயங்களைச் சேகரித்தல், ஆதாரங்களைச் சேகரித்தல் போன்றவற்றில் விசாரணை அதிகாரிக்கும், மருத்துவர்களுக்கும் ஏற்கெனவே போதுமான வழிகாட்டல்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுரைகளை வழங்கியுள்ளது.

இந்த வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், குறிப்பாக பாலியல் குற்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுத்தும் போலீஸார், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்''.

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x