Published : 09 Oct 2020 05:29 PM
Last Updated : 09 Oct 2020 05:29 PM
உத்தரகாண்ட் மாநிலத்தில் கோவிட் பாதிப்பைத் தடுக்க தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்தார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 7.9 லட்சம் பேருக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 53,359 பேருக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 44,535 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 7,849 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் இதுவரை 702 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 59 லட்சத்தைக் கடந்தனர்.
கரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் பொது விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக உத்தரகாண்ட் எம்எல்ஏக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது மற்றும் கை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட கோவிட் வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் கோவிட் வழிகாட்டுதல் உறுதிமொழி ஏற்றனர்.
இதுகுறித்து மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கூறியதாவது:
''குளிர்காலம் மற்றும் பண்டிகைகளின் காலம் நெருங்கி வருவதால், கோவிட் வழிகாட்டுதல் நெறிமுறையைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு இன்னும் தேவைப்படுகிறது. அதற்காகவே இந்த கோவிட் விழிப்புணர்வு உறுதிமொழி.
வைரஸின் அறிகுறிகளைக் கண்டறிந்தால் மக்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். இதுகுறித்து மேலும் பிரச்சாரம் தொடர்ந்து மேள்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் மட்டுமே கோவிட்-19ஐ எதிர்த்துப் போராட முடியும். எனவே, முடிந்தவரை அரசின் துறைசார் கூட்டங்களை மெய்நிகர் தளங்கள் மூலம் நடத்துமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன்.
விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை ஆகியவை காரணமாக சமீபத்தில் மாநிலத்தில் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை குறைய வழிவகுத்தன. ஆனால், இனிமேலும் கவனக்குறைவு இருக்கக்கூடாது.
கரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான பொது விழிப்புணர்வு பிரச்சாரம் இந்த நோய் மாநிலத்திலிருந்து அகற்றப்படும் வரை தொடரும்''.
இவ்வாறு உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT