Published : 09 Oct 2020 12:25 PM
Last Updated : 09 Oct 2020 12:25 PM
மத்தியில் ஆட்சிக்கு வரும் பெரும்பாலான அரசுகள் அனைத்திலும் அமைச்சர் பதவி பெறுபவராக லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரான ராம்விலாஸ் பாஸ்வான் இருந்தார். அவரது அரசியல் திறமையை பிஹார்வாசிகள் நினைவுகூர்கின்றனர்.
பிஹாரின் தலித் ஆதரவு பிராந்தியக் கட்சியாக இருப்பது ராம்விலாஸ் பாஸ்வான் தொடங்கிய லோக் ஜனசக்தி (எல்ஜேபி). கடந்த வருடம் மக்களவைத் தேர்தலில் அக்கட்சி, மாநிலத்தில் போட்டியிட்ட ஆறு தொகுதிகளிலும் வென்றிருந்தது. இதனால், பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மத்திய உணவுத்துறை அமைச்சராக இருந்தார் பாஸ்வான். ஒரு பிராந்தியக் கட்சியில் இருந்துகொண்டு எதிரும், புதிருமான கூட்டணிகளின் ஆட்சிகளில் அவர் பல முறை மத்திய அமைச்சர் பதவியைப் பெற்றிருந்தார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்திடம் பிஹார்வாசிகள் சிலர் கூறுகையில், ''ஒரு பிராந்தியக் கட்சியின் தலைவராக இருந்தும், பல்வேறு அரசுகளின் அமைச்சரவையில் இடம்பெற்றது ராம்விலாஸ் பாஸ்வானின் சாதனையாகும்.
பிஹார் மாநில மற்றும் தேசிய அரசியலின் சூழலுக்கு ஏற்பப் பொருத்தமான கூட்டணியில் இணைவதில் பாஸ்வானுக்கு இணை எவருமில்லை. அமைச்சராக அவர் தொடர்ந்து பிஹார்வாசிகளுக்குப் பல்வேறு நன்மைகளைச் செய்து, பெருமை சேர்த்தார். இவர் அளவிற்கு அரசியல் தந்திரங்களை அவர் மகன் சிராக் பாஸ்வான்கூடப் பயன்படுத்துவது சந்தேகமே'' எனத் தெரிவித்தனர்.
கடந்த 1989-ல் ஜனதா தளம் கட்சியின் எம்.பி.யான பாஸ்வான், பிரதமர் வி.பி.சிங் அமைச்சரவையில் முதல் முறையாகத் தொழிலாளர் நலத்துறையின் இணை அமைச்சரானார். 1996-ல் மாநிலங்களவை உறுப்பினரானவருக்கு மத்திய ரயில்வே துறையின் இணை அமைச்சர் பதவி கிடைத்தது.
ஜனதா தளம் உடைந்து, அதில் ஒரு கட்சியாக ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) உருவானது. இதன் சார்பில் 1998-ல் பாஸ்வானுக்கு மத்திய தொலைத்தொடர்புத் துறையின் இணை அமைச்சர் பதவி கிடைத்தது. பிறகு ஜேடியூவில் இருந்து தனியாகப் பிரிந்த பாஸ்வான், எல்ஜேபியை 2000-ம் ஆண்டில் தொடங்கினார். அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) நிலக்கரித் துறை அமைச்சரானார்.
இதன் பிறகு மாறிய தேசிய அரசியல் சூழலைத் தெளிவாக பாஸ்வான் புரிந்து கொண்டார். 2004-ல் காங்கிரஸ் தலைமையில் உருவான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் (யுபிஏ) இணைந்தவருக்கு ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் பதவி கிடைத்தது. பிஹாரின் அரசியல் காரணமாக யுபிஏவில் இருந்து வெளியேறியவர் 2009 மக்களவைத் தேர்தலில் முதன்முறையாகத் தோல்வியுற்றார். இதனால் அப்போது மட்டும் அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
2014-ல் வீசிய நரேந்திர மோடி அலையை முன்கூட்டியே உணர்ந்த பாஸ்வான் அவருடன் சேர மீண்டும் என்டிஏவில் இணைந்தார். இந்த முறை பாஸ்வான், தன் மகன் சிராக் பாஸ்வானை அமைச்சரவையில் அமரவைக்க விரும்பினார். இதுகுறித்த செய்திகள் வெளியாகவே பிரதமர் மோடியிடம் இருந்து அவருக்கு நெருக்கடி ஏற்பட்டதாகக் கருதப்பட்டது. இதனால், அமைச்சரவையில் வாய்ப்புக் கிடைத்தால், தானே அதைப் பெறுவதாகவும், மகனுக்கு என்ற செய்திகள் தவறானவை என்றும் பாஸ்வான் மறுப்புத் தெரிவிக்க வேண்டியதாயிற்று.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருந்த பாஸ்வான் 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. வாய்ப்பைத் தனது மகன் மற்றும் கட்சியினருக்கு அளித்தவர், மாநிலங்களவை எம்.பி.யாகத் தேர்வானார்.
இதற்கான தேர்தல் ஒப்பந்தத்தையும் என்டிஏவுடனான கூட்டணியின் போது பாஸ்வான் ஏற்படுத்திக் கொண்டார். இதுவரையும், பாஸ்வான் ஐந்து பிரதமர்களின் கீழ் மத்திய அமைச்சராக இருந்துள்ளார். இதில், வி.பி.சிங், தேவகவுடா, அட்டல் பிஹாரி வாஜ்பாய், மன்மோகன் சிங் மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவரது மறைவு பிஹாரில் எல்ஜேபிக்குத் தேர்தல் சமயத்தில் பெரும் இழப்பாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT