Published : 08 Oct 2020 10:07 PM
Last Updated : 08 Oct 2020 10:07 PM
ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சருமான ராம்விலாஸ் பஸ்வான் காலமானார். அவருக்கு வயது 74.
ராம்விலாஸ் பஸ்வான் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில் அவர் காலமானார்.
இதனை அவரது மகன் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில் ‘‘அப்பா நீங்கள் தற்போது இந்த உலகத்தில் இல்லை. எப்போது எல்லாம் எனக்கு தேவையோ அப்போது எல்லாம் நீங்கள் என்னுடன் இருந்து இருக்கிறீர்கள். உங்களை மிஸ் செய்கிறேன்.’’ என்று பதிவிட்டுள்ளார்.
ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ‘‘சோசலிச தலைவர் ஜெய்பிரகாஷ் நாராயண் மீது கொண்ட ஈர்ப்பால் இளம் வயதிலேயே நெருக்கடியை நிலையை எதிர்த்து போராடியவர் ராம் விலாஸ் பாஸ்வான்’’ என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ‘‘எனது சோகத்தை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. நமது நாட்டிற்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. ராம் விலாஸ் பாஸ்வானின் மரணம் எனக்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு. எனது நண்பரை இழந்துள்ளேன். மதிப்புக்குரிய சக தோழரை இழந்து விட்டேன். ஒவ்வொரு ஏழையின் வாழ்விலும் ஒளிவிளக்கு ஏற்ற வேண்டும் என பணியாற்றியவர் ராம் விலாஸ் பாஸ்வான்.’’ எனக் கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT