Published : 24 Sep 2015 10:55 AM
Last Updated : 24 Sep 2015 10:55 AM
மனைவியை கொன்று தந்தூர் அடுப்பில் எரித்த வழக்கின் குற்றவாளியான சுசில் சர்மா, சுமார் 20 ஆண்டுகளுக்கு பின் திஹார் சிறையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை பரோலில் விடுதலையாகி உள்ளார். திஹார் சிறைக் கைதிகளில் 20 ஆண்டுகளுக்குப் பின் பரோலில் வெளிவரும் ஒரே கைதியாக சுசில் சர்மா கருதப்படுகிறார்.
தெற்கு டெல்லியில் ஒரு தனியார் மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் தனது அத்தையை பார்க்க பரோலில் வந்திருந்தார் சுசில் சர்மா. தற்போது 54 வயதாகும் அவர் மிகுந்த தயக்கத்துக்கு இடையே முதன்முறையாக பத்திரிகையாளர்களிடம் பேசினார். இதில் கொலை நடந்த நாளில் நடந்தவற்றை வேதனையுடன் நினைவு கூர்ந்தார் சர்மா.
இது குறித்து சுசில் கூறும்போது, “அன்றைய தினம் நான் வீட்டுக்கு சென்றபோது போனில் பேசிக்கொண்டிருந்த எனது மனைவி என்னைப் பார்த்ததும் போனை துண்டித்து விட்டார். இதனால் போனில் நான் ‘ரீடயல்’ செய்தபோது, அவரது ஆண் நண்பரின் குரல் கேட்டது. அந்த ஒரு நிமிடத்தில் எனக்கு கோபம் தலைக்கேறி விட்டது. அது என்னை 20 ஆண்டுகள் சிறையில் தள்ளி விட்டது. எனது குடும்பத்தினரையும் 20 ஆண்டுகளாக நீதிமன்றம், வழக்கு என அதிகமாக துன்புறுத்தி விட்டேன்” என்றார்.
டெல்லி இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த சுசில்குமார் சர்மா, தனது மனைவி நைனா சஹானிக்கு அவரது நண்பர் மத்லூப் கரீமுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டார். இதனால், கடந்த 1995, ஜூலை 2-ம் தேதி நைனாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றவர் அவரது உடலை சிறு, சிறு துண்டுகளாக வெட்டினார்.
இவற்றை டெல்லி, ஜன்பத் பகுதியில், அசோக் யாத்ரி நிவாசின் பாக்யா எனும் உணவு விடுதியின் தந்தூர் அடுப்பில் போட்டு சாம்பலாக்க முயன்றார். இது ‘தந்தூர் அடுப்பு கொலை வழக்கு’ எனும் பெயரில் நாடு முழுவதும் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கொலை வழக்கில், சுசில்குமார் சர்மாவுடன் அவரது நண்பரும், உணவு விடுதியின் மேலாளராகவும் இருந்த கேஷவ் குமார் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். டெல்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு மிகவும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. கடந்த 2003, நவம்பர் 3-ம் தேதி வெளியான தீர்ப்பில், கேஷவ் குமாருக்கு 7 ஆண்டுகள் சிறையும், சுசில்குமாருக்கு தூக்கு தண்டனையும் கொடுக்கப்பட்டது.
சுசில்குமாரின் இந்த தண்டனையை, டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2007, பிப்ரவரி 19-ம் தேதி உறுதி செய்தது. பிறகு சுசில்குமார் உச்ச நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டில் அவரது தூக்கு தண்டணை, 2013 அக்டோபரில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதனால், அப்போது 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றிருந்த சுசில்தண்டனை முடிந்து விடுதலையாக அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்பட்டது.
ஆனால் அவரது வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி திஹார் சிறை நிர்வாகத்தினருக்கு சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் விடுதலையாக முடியாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. வழக்கமாக எந்த புகாரிலும் சிக்காமல் நன்னடத்தை கொண்ட ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு 14 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை கிடைத்துவிட வாய்ப்புள்ளது. ஆனால், சுசில் சர்மாவின் மீது எந்தவொரு புகாரும் இன்றி 20 ஆண்டுகள் கடந்த பின்பும் அவர் விடுதலையாக முடியாமல் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT