Published : 08 Oct 2020 05:17 PM
Last Updated : 08 Oct 2020 05:17 PM
தப்லீக் ஜமாத் குறித்து வெறுப்புணர்வு கருத்துகளைப் பரப்புவது குறித்த வழக்கில், சமீபகாலமாக பேச்சு சுதந்திரமும், கருத்துச் சுதந்திர உரிமையும்தான் அதிகம் மீறப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.
அதுமட்டுமல்லாமல் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் தவிர்க்கப்பட வேண்டியது. அதிர்ச்சியளிக்கிறது என்று உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் டெல்லி நிஜாமுதீனில் தப்லீக் ஜமாத் மத மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் பலர் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.
இந்நிலையில் தப்லீஜ் ஜமாத் மத மாநாட்டில் பங்கேற்றவர்களால்தான் நாட்டில் கரோனா வைரஸ் அதிகமாகப் பரவியது என்று ஒரு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதுகுறித்து ஜாமியத் உலமா ஐ ஹிந்த் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது.
அதில், “தப்லீக் ஜமாத் மத மாநாட்டின் மூலம்தான் கரோனா பரவியது என்று பொய்யான செய்திகளை வெளியிடுகிறார்கள். அந்தச் செய்தியை நிறுத்த உத்தரவிட வேண்டும். அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
துரதிர்ஷ்டவசமாக தப்லீக் ஜமாத் மாநாடு நடந்தபோது, கரோனா வைரஸ் பரவியதற்கு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் குற்றம் சாட்டுகிறார்கள். அச்சமூட்டுகிறார்கள். இதுபோன்ற செய்திகளை வெளியிட ஊடகங்களுக்குத் தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவுக்கு மத்திய அரசு சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ஒட்டுமொத்த ஊடகங்களும் தப்லீக் ஜமாத் குறித்த செய்தியையும் வெளியிடக்கூடாது என்று தடை விதிக்க மனுதாரர்கள் கோருகிறார்கள். இது குடிமக்களின் உரிமையையும், அறிவார்ந்த சமூகத்தில் பத்திரிகையாளர்களின் உரிமையையும் அழிப்பதாக அமையும்.
ஆட்சேபத்துக்குரிய எந்தவிதமான ஆதாரபூர்வமான செய்திகள் எந்த சேனல்கள், பத்திரிகைகளிலும் வராத நிலையில், எந்த உறுதியான தகவலும் இல்லாத நிலையில், கேபிள் டிவி நெட்வொர்க் சட்டத்தின் கீழ் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது” எனத் தெரிவித்தது.
இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ஏ.எஸ்.போபன்னா, வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தப்லீக் ஜமாத் சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜரானார். மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.
அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிடுகையில், “ மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனு என்பது மனுதாரர்களின் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை நசுக்குவதாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
அப்போது தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே கூறுகையில், “சமீபகாலமாக அதிகமாக மீறப்படும் உரிமைகளில் பேச்சு சுதந்திரமும், கருத்துச் சுதந்திரமும் இருக்கிறது. உங்கள் பிரமாணப் பத்திரத்தில் எந்தவிதமான குற்றச்சாட்டைக் கூறவும் சுதந்திரம் இருக்கிறது. அதேபோல விருப்பம் போல் வாதிடமும் சுதந்திரம் இருக்கிறது.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் அதிருப்தி அளிக்கிறது. அந்தத் துறையின் கூடுதல் செயலாளர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தேவையில்லாத கருத்துகள் இருக்கின்றன. முட்டாள்தனமான வாதங்கள் வைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, வி.ராமசுப்பிரமணியன் குறுக்கிட்டு, “மத்திய அரசு இந்த வழக்கில் செயல்படுவதுபோல் நீதிமன்றத்தையும் நடத்த முடியாது. தப்லீக் ஜமாத் போன்ற வெறுப்பைப் பரப்பும் செய்திகளை வெளியிட்ட சம்பவங்களில் ஊடகங்களுக்கு அறிவுறுத்த கடந்த காலத்தில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை தகவல் தொழில்நுட்ப ஒளிபரப்புத்துறைச் செயலாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
பொதுநலன் கருதி, கேபிள்டிவி நெட்வொர்க் சட்டத்தின் கீழ் சேனல்கள் ஒளிபரப்புவதைத் தடை செய்ய முடியுமா என்பதை ஆய்வு செய்வோம்.
மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் அறிவற்றது. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். இந்த வழக்கை இரு வாரத்துக்கு ஒத்தி வைக்கிறோம்” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT