Published : 08 Oct 2020 02:48 PM
Last Updated : 08 Oct 2020 02:48 PM
உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் எனும் நோக்கில் கொண்டுவரப்பட்ட ஆத்மநிர்பார் பாரத் (தற்சார்பு இந்தியா) வெளிநாட்டு வர்த்தகத்தில் சிக்கலை ஏற்படுத்திவிடக்கூடாது என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
ஐசிஆர்ஐஇஆர் நிறுவனம் சார்பில் பொருளாதாரம் சார்ந்த கருத்தரங்கு காணொலியில் நேற்று நடந்தது. இதில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
''கரோனா வைரஸால் ஏற்பட்ட பிரச்சினையிலிருந்து விடுபட வளர்ந்து வரும் நாடுகள் அதிகமாக நிவாரணப் பணிகளிலும், சீரமைப்புப் பணிகளிலும் செலவிட வேண்டும். நிவாரணப் பணிகளையும், பொருளாதார ஊக்கப் பணிகளையும் குழப்பிக் கொள்ளக்கூடாது.
பொருளாதாரத்தை உந்தித் தள்ளுவதற்கு வழங்கப்படுவதுதான் ஊக்கத் திட்டங்கள். நிவாரணத் திட்டங்கள் என்பது குறு, சிறு நடுத்தர நிறுவனங்களைக் கைதூக்கிவிடுவது. பொருளாதாரத்தின் உற்பத்தித் திறன் பாதிப்படையாமல் இருப்பதை உறுதி செய்வது அவசியம்.
மத்திய அரசு தற்போது செய்துவரும் ஆத்மநிர்பார் பாரத் பிரச்சாரம் எனும் பாதுகாப்பு வாதத்தால் எந்தவிதமான பலனையும் ஏற்படுத்தக்கூடாது. அதாவது, உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்க வேண்டும், ஊக்குவிக்க வேண்டும் எனும் நோக்கில் வெளிநாட்டு வர்த்தகத்தில் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடாது.
தற்சார்பு இந்தியா போன்ற பல்வேறு பல கொள்கைகள் இதற்கு முன் கொண்டுவரப்பட்டு அது எதிர்பார்த்த முடிவுகளைத் தரவில்லையே. என்னைப் பொறுத்தவரை தற்சார்பு இந்தியா பற்றி எனக்குத் தெளிவாகத் தெரியவில்லை. இந்தக் கொள்கையால், உள்நாட்டில் உற்பத்திக்கான சூழலை உருவாக்குமா எனத் தெரியாது.
என்னைப் பொறுத்தவரை மேக் இன் இந்தியா திட்டத்தின் மறுவடிவம்தான் தற்சார்பு இந்தியா.
உள்நாட்டுத் தொழில்களை, உற்பத்தியை ஊக்குவிப்பதாக இந்தக் கொள்கை இருந்தால், துரதிர்ஷ்டவசமாக சமீபத்தில் வரி வீதங்களை மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது. இது எனக்குச் சரியாகத் தெரியவில்லை.
ஏனென்றால் உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்கும் பல கொள்கைகளை இதற்கு முன் முயன்றுள்ளோம். இதற்கு முன் ஒரு தொழில்முனைவோர் எந்தத் தொழில் செய்தாலும் லைசன்ஸ், பெர்மிட் வாங்க வேண்டும். அனைத்துக்கும் அனுமதி என்ற முறையைத் தான் செயல்படுத்தி வந்தோம்.
ஆதலால், உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்போம் எனும் பாதுகாப்பு வாதம் என்பதே சிக்கலானதுதான். இந்தப் பாதுகாப்பு வாதத்தால் சில கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே வளரும். ஆனால், அடிப்படையில் நம்மில் பெரும்பாலானோர் வறுமையில்தான் இருக்கிறார்கள்.
தற்சார்பு இந்தியா எனும் விஷயத்தில் எந்த அம்சத்தை மத்திய அரசு வலியுறுத்துகிறது என்பது எனக்கு உறுதியாகத் தெரியவி்ல்லை. உற்பத்தியை உருவாக்கும், சூழலை உருவாக்குமா என்பதும் தெரியவில்லை.
ஆனால், இப்போதுள்ள நிலையில் இந்தியாவுக்கு உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி அவசியம். அதாவது வெளிநாடுகளில் இருந்து மிகக் குறைந்த விலையில் மூலப்பொருட்களை இறக்குமதி செய்து, அதை நிறைவு செய்த பொருளாக மாற்றி வெளிநாடுகளுக்கு அதிக விலைக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்.
ஆதலால், உலகம் முழுவதும் நாம் பொருட்களை சப்ளை செய்ய விரும்பினால், நாம் கட்டமைப்பு வசதிக்கான ஆதரவை உருவாக்குவது, போக்குவரத்து வசதிகளை அதிகப்படுத்துவது அவசியம்.
ஆனால், மற்ற நாடுகளுடன் வரிப் போரை உருவாக்கக் கூடாது. ஏனென்றால் இறக்குமதிக்கு வரியை அதிகப்படுத்தும் பல்வேறு திட்டங்களை மற்ற நாடுகள் செய்து அது தோல்வியில்தான் முடிந்துள்ளன''.
இவ்வாறு ரகுராம் ராஜன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT