Last Updated : 08 Oct, 2020 01:50 PM

1  

Published : 08 Oct 2020 01:50 PM
Last Updated : 08 Oct 2020 01:50 PM

அமைச்சக செயலாளர் மற்றும் அதற்குமேல் அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரிகள் அனைத்து வேலை நாட்களும் அலுவலகம் வர வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

கோப்புப்படம்

புதுடெல்லி

மத்திய அமைச்சக செயலாளர் மற்றும் அதற்கு மேல் அந்தஸ்தில் உள்ள உயர் அதிகாரிகள் அனைவரும் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகத்துக்கு வர வேண்டும் என்று மத்திய பணியாளர் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய பணியாளர் துறை அமைச்சகம் நேற்று அனைத்து அமைச்சகங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''கரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு அலுவலகப் பணிகளை மத்திய அரசு நிறுத்திய நிலையில், மீண்டும் பணிகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. துணைச் செயலாளர் மற்றும் அதற்கு மேல் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகம் வர வேண்டும் என்று மத்திய அரசு இதற்கு முன் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் அமைச்சக செயலாளர் மற்றும் அதற்குக் கீழ்நிலையில் இருக்கும் பணியாளர்களில் குறைந்தபட்சம் 50 சதவீதம் பேர் அலுவலகத்துக்கு வருவதை இனி உறுதி செய்ய வேண்டும்.

அமைச்சகத் துறையின் தலைமை அதிகாரி, அலுவலகத்தில் 50 சதவீதத்துக்கும் குறைவில்லாமல் பணியாளர்கள் வருவதைக் கண்டிப்புடன் உறுதி செய்ய வேண்டும். பொதுநலன் கருதி, பணியாளர்கள் அனைவரும் சமூக விலகலைக் கடைப்பிடித்து அனைத்துச் சூழலிலும் பணியாற்றுவது அவசியம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அமைச்சக செயலாளர் மற்றும் அதற்கு மேல் அந்தஸ்தில் இருக்கும் அதிகாரிகள் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலகம் வர வேண்டும். இது தொடர்பாக அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மத்திய அரசு அதிகாரிகள் வசித்துவந்தால் அவர்கள் மட்டும் அலுவலகத்துக்கு நேரடியாக வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

மறு உத்தரவு வரும்வரை, மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே பணியாற்றலாம். அதேநேரத்தில், அலுவலகத்துக்கு நேரடியாக வரமுடியாமல், வீட்டில் இருந்தே பணியாற்றும் அதிகாரிகள் எப்போதும் தொடர்பு கொள்ளும்வகையில் தொலைபேசி, கைப்பேசி இணைப்பைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.

அலுவலகத்துக்குக் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரையில் ஒரு பிரிவாகவும், காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரையில் ஒரு பிரிவாகவும் அதிகாரிகள் பணியாற்றலாம்.

அலுவலகத்தில் பணியாளர்களுக்குத் தேவையான சானிடைசர் இருக்குமாறு உயர் அதிகாரிகள் பார்த்துக்கொள்ள வேண்டும். அலுவலகத்தைச் சீரான இடைவெளியில் சுத்தம் செய்தல், சமூக விலகலைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் கண்டிப்பாக அணிந்திருத்தலை உறுதி செய்ய வேண்டும்.

பெரும்பாலான அதிகாரிகள் இடையிலான முக்கிய ஆய்வுக்கூட்டங்களை நேரடியாக நடத்துவதற்குப் பதிலாக, காணொலி மூலமே நடத்த பரிந்துரைக்கப்படுகிறது. ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு தொடர்ந்து ரத்து செய்யப்படுகிறது. மறு உத்தரவு வரும்வரை வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட வேண்டும்''.

இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x