Published : 08 Oct 2020 11:23 AM
Last Updated : 08 Oct 2020 11:23 AM
தேஜஸ்வீ பிரசாத் யாதவின் நடவடிக்கையை கண்டித்து மெகா கூட்டணியிலிருந்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா(ஜேஎம்எம்) கட்சி வெளியேறுகிறது. ஜார்கண்ட்டின் முதல்வர் ஹேமந்த் சோரனின் கட்சியான இது, பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.
பிஹாரின் 243 தொகுதிகளுக்கு அக்டோபர் 28 முதல் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதில், முக்கிய அங்கம் வகிக்கும் எதிர்கட்சிகளின் மெகா கூட்டணிக்கு லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) தலைமை வகிக்கிறது.
லாலுவின் இளைய மகனான தேஜஸ்வீ முதல் அமைச்சர் வேட்பாளராகவும் முன்னிறுத்தப்பட்டுள்ளார். கால்நடைத்தீவன வழக்கில் சிக்கிய லாலு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால், தேஜஸ்வீ கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீட்டில் பொறுப்பேற்றிருந்தார்.
இதன் இறுதி அறிவிப்பின் போது, தனது பங்கில் ஜேஎம்எம் கட்சிக்கு தொகுதி ஒதுக்குவதாக அறிவித்திருந்தார். இது வெறும் இரண்டு என் அறிந்தமையால் தேஜஸ்வீ மீது ஜார்கண்ட் முதல்வரும் ஜேஎம்எம் தலைவரான ஹேமந்த் சோரண் அதிருப்தி அடைந்துள்ளார்.
இதனால், அக்கட்சி பிஹாரில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. தம் மாநில எல்லையில் அமைந்துள்ள ஏழு தொகுதிகளில் வேட்பாளர்களையும் ஜேஎம்எம் அறிவித்துள்ளது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் ஜேஎம்எம் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரான சுப்ரியோ பட்டாச்சார்யா கூறும்போது, ‘பிஹாரில் ஆர்ஜேடி ஆட்சி அமைக்க மூன்று முறை எங்கள் கட்சி உதவி இருந்தது. இந்த நல்லுறவை தன் தந்தை லாலு அளவிற்கு தேஜஸ்வீயால் உணர முடியவில்லை.’ எனத் தெரிவித்தார்.
ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் மெகா கூட்டணி ஜேஎம்எம் தலைமையில் நடைபெற்றது. இதில், ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டு ஜார்கண்டில் ஜேம்எம் கட்சியின் முதல்வராக ஹேமந்த் உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT