Published : 08 Oct 2020 08:10 AM
Last Updated : 08 Oct 2020 08:10 AM

புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாது: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் ஜெக்கன நெக்கலம் கிராமத்துக்கு நேற்று வந்த மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்குள்ள விவசாயிகளிடம் உரையாடினார். - பிடிஐ

விஜயவாடா

மத்திய அரசு கொண்டு வந்துள்ளபுதிய வேளாண் சட்ட மசோதாவால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று விஜயவாடாவில் தெரிவித்தார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் ஜெக்கன நெக்கலம் கிராமத்தில் உள்ள விவசாய கிடங்கை ஆய்வுசெய்து, அங்குள்ள விவசாயிகளிடம் வேளாண் சட்ட மசோதா குறித்து விளக்கங்களை அளித்தார்.

சிலரிடம் விவசாய உற்பத்தி, அதன் மூலம் வரும் வருவாய், மார்க்கெட்டிங் போன்றவை குறித்து கேட்டறிந்தார். அதன் பின்னர் அவர் விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் பேசிய தாவது:

புதிய வேளாண் சட்ட மசோதா அமல் படுத்தப்பட்டதால், இனிவிவசாயிகள் தங்களது உற்பத்தி பொருட்களை எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று விற்கலாம். இதற்காக எந்தவொரு வரியும் செலுத்த தேவையில்லை.

மார்க்கெட் யார்டு, இடைத் தரகர்கள் என இவர்கள் மூலம் விற்கும் பொருட்களுக்கு விவசாயிக்கு சுமார் 8 சதவீதம் வரை இதுவரை வரி செலவு இருந்தது. இனி இது இருக்காது. இடைத்தரகர்கள் இல்லாத புதிய வேளாண் சட் டத்தை இந்த அரசு அமல் படுத்தி உள்ளது.

இதுவரை நெல், கோதுமைக்கு மட்டுமே ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது மத்திய அரசு 22 பொருட்களுக்கு ஆதரவு விலை நிர்ணயித்துள்ளது. காய்கறிக்கு ஆதரவு விலை நிர்ணயிக்காத காரணத்தால், இதுவரை போதிய விலை போகாத காய்கறிகளை சாலையிலேயே கொட்டி விட்டு செல்லும் அவலம் இருந்தது. இனி அதுபோல் நடக்காது. உணவு உற்பத்தி பொருட்கள் தயாரிப்புக்கும் மத்திய அரசு ஊக்கம் அளிக்கிறது.

தொழிலாளர் நல சட்டத்திலும் சில மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வரும். கரோனா தொற்று மீது போராடிக் கொண்டே நாட்டின் வளர்ச்சிப் பணியிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு மத்திய நிதி அமைச்சர் பேசினார்.

முன்னதாக அவர் விவசாயிகளிடம் வேளாண் சட்டமசோதா குறித்து நேரில் விளக்கினார். அப்போது, ஆந்திராவின் தலைநகரம் அமராவதியாகவே இருக்க வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த சில பெண்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளித்தனர். இது குறித்து ஆலோசிக்கப்படுமென அப்போது அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x