Published : 08 Oct 2020 08:08 AM
Last Updated : 08 Oct 2020 08:08 AM

கட்சிகள் நன்கொடை பெறுவதில் வெளிப்படைத்தன்மை இல்லை: ஏடிஆர் ஆய்வறிக்கையில் தகவல்

புதுடெல்லி

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ஏடிஆர்) தெரிவித்துள்ளது.

1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அனைத்து அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு நிதியாண்டிலும் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் பெற்ற நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். இதனை பொதுமக்கள் அறிவதற்காக தேர்தல்ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிடுகிறது. 2014-15 முதல் 2018-19 வரையிலான 5 ஆண்டுகளில் வெளியான இத் தகவல்களை ஏடிஆர் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதன்படி மேற்கண்ட 5 ஆண்டுகளில் 11 அரசியல் கட்சிகள் மொத்தம் ரூ.2,777.97 கோடி நன்கொடை பெற்றுள்ளன. இதில் ஆளும் பாஜக மட்டும் ரூ.2,225.66 கோடி (80.12%) பெற்றுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் கட்சி ரூ.379.02 கோடி (13.64%) பெற்றுள்ளது.

இந்த 11 கட்சிகளில் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் மட்டுமே உரிய கால அவகாசத்திற்குள் நன்கொடை விவரங்களை தாக்கல் செய்துள்ளன. 8 அரசியல் கட்சிகள் 5 ஆண்டுகளில் ஒருமுறையேனும் தாமதம் செய்துள்ளன.

தெரியாத நிதி மூலங்களிடம் (unknown sources) இருந்தும் அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்றுள்ளன. வருவான வரித் துறையின் பான் எண் (நிரந்தர கணக்கு எண்) இல்லாமல் மொத்தம் ரூ.325.23 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளது. இதில் பாஜக அதிகபட்சமாக ரூ.237.22 கோடி (72.94%) பெற்றுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் கட்சி ரூ.81.87 கோடியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரூ.5.04 கோடியும் பெற்றுள்ளன.

இதுதவிர தவறான பான் எண் மூலம் அரசியல் கட்சிகளுக்கு ரூ.15.75 கோடி நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. மூன்று கட்டங்களாக நடைபெறும் பிஹார் தேர்தல்அக்டோபர் 28-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதில்வெளிப்படைத் தன்மை இல்லாதது முக்கியத்துவம் பெறுகிறது.

தேர்தல் நேரத்தில் கறுப்புப் பணம் நாட்டில் பரவலாக பயன்படுத்தப்படுவதை கள நிலவரம் உணர்த்துவதால், அரசியல் நன்கொடையில் வெளிப்படைத் தன்மை என்பது காகிதப் புலியாக எழுத்தளவில் மட்டுமே உள்ளது.

பான் எண் இல்லாமல் மற்றும் தவறான பான் எண்ணுடன் அளிக்கப்பட்ட நன்கொடையில் 2014-15-ல் (அதாவது நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற ஆண்டில்) அதிக எண்ணிக்கையில் உள்ளது.

நன்கொடையாளர் பெயர், முகவரி, நன்கொடை பெறப்பட்ட வழி போன்ற விவரம் சில இடங்களில் அறிவிக்கப்படாமலும் உள்ளன. நாட்டில் 2004-05 முதல்2014-15 வரையிலான 11 ஆண்டுகளில் தேசிய மற்றும் பிராந்திய கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை ஏடிஆர் ஆய்வு செய்து 2017 ஜனவரியில் அறிக்கை வெளியிட்டது. அதில் பெரிய கட்சிகளின் வருவாய் ஆதாரங்கள் பெரும்பாலும் தெரியவரவில்லை என்று கூறியிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x