Published : 07 Oct 2020 02:39 PM
Last Updated : 07 Oct 2020 02:39 PM

விவிஐபி விமானங்களைக் கொள்முதல் செய்யும் பணிகள் காங்.அரசில்தான் தொடங்கின: மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்

புதுடெல்லி

பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் உள்ளிட்ட விவிஐபிக்களுக்காக பிரத்யேகமாக ரூ.8,400 கோடி மதிப்பில் இரு விமானங்கள் வாங்கப்பட்டுள்ள நிலையில், இந்த விமானங்களைக் கொள்முதல் செய்யும் பணிகள் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில்தான் தொடங்கின என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தற்போது ஏர் இந்தியாவின் பி747 விமானங்களில் பயணம் செய்கின்றனர்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், 'ஏர்போர்ஸ் ஒன்' என்ற அதிநவீன விமானத்தைப் பயன்படுத்துகிறார். இதே அளவுக்கு அனைத்துப் பாதுகாப்பு வசதிகளையும் கொண்ட 2 விமானங்களை வடிவமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.

இதன்படி அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து பி 777 ரகத்தைச் சேர்ந்த 2 விமானங்கள் வாங்கப்பட்டன. இந்த விமானங்களில், 'ஏர்போர்ஸ் ஒன்' விமானத்தின் அனைத்துப் பாதுகாப்பு அம்சங்களையும் போயிங் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

குடியரசுத் தலைவர், பிரதமருக்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன விமானங்களுக்கு 'ஏர் இந்தியா ஒன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இவை 'பறக்கும் கோட்டை' என்று வர்ணிக்கப்படுகின்றன.

'ஏர் இந்தியா ஒன்' விமானம் 43,100 அடி உயரம் வரை பறக்கும் திறன் கொண்டது. விமானத்துக்குள் அலுவலகம், கூட்ட அரங்கு, படுக்கை அறை, சமையல் அறை, 2,000 பேர் சாப்பிடுவதற்குத் தேவையான உணவுப் பொருட்களை வைக்கும் கிடங்கு, செயற்கைக்கோள் தொலைபேசி, இணைய வசதி, மருத்துவ அறுவை சிகிச்சை அறை, மருத்துவக் குழுவினர் தங்கும் அறை, பாதுகாப்பு வீரர்கள் தங்கும் அறை, விஐபிக்கள் தங்கும் அறை என அனைத்து வசதிகளும் உள்ளன. 'ஏர் இந்தியா ஒன்' அணியைச் சேர்ந்த இரு விமானங்களிலும் ஏவுகணைத் தடுப்பு பாதுகாப்பு அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த விமானங்களை மத்திய அரசு வாங்கியது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருந்தார்.

''பிரதமர் மோடி மக்கள் பணத்தை வீணாக்கி ரூ.8 ஆயிரம் கோடியில் இரு விமானங்களை வாங்கியுள்ளார். அங்கு குஷன் இல்லை. அவரின் வசதிக்காக சொகுசு மெத்தைகளை அமைத்துள்ளார்.

ரூ.8 ஆயிரம் கோடிக்கு இரு விமானங்களை வாங்கிய பிரதமர் மோடியிடம் ஏன் நீங்கள் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. அவரிடம் எந்தக் கேள்வியையும் யாரும் கேட்காதது எனக்கு வியப்பாக இருக்கிறது. ஆனால், அனைவரும் நான் டிராக்டரில் அமர்ந்தபோது அதிலிருந்த குஷன் இருக்கை குறித்தே கேட்கிறீர்கள்.

நமது எல்லையில் சீனப் படைகள் நிறுத்தப்படுகின்றன. அடுத்துவரும் குளிர்காலத்தையும் பொருட்படுத்தாமல் நமது ராணுவ வீரர்கள் நம்மைப் பாதுகாத்து வருகிறார்கள். அவர்களுக்காக ஆயுதங்கள், எரிபொருள், உணவுகள், குளிர்காலத்துக்குத் தேவையான பொருட்கள் கொண்டு செல்லப்படும்போது இவ்வளவு பெரிய தொகையில் விமானம் தேவையா?'' என்று ராகுல் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், “தற்போது பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் பயன்படுத்திவரும் ஏர் இந்தியா விமானம் 25 ஆண்டுகள் பழமையானது.

அந்த விமானங்களால் ஐரோப்பா, அட்லாண்டிக் நாடுகளுக்கு நீண்ட தொலைவு பயணிக்க இயலாது. பயணித்தின்போது குறிப்பிட்ட ஏதாவது ஒரு நாட்டில் இறங்கி விமானத்துக்கு எரிபொருள் நிரப்பி பராமரிப்புக்குப் பின்புதான் செல்ல முடியும்.

ஆனால், இந்த இரு விமானங்களை வாங்குவதற்கு கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில்தான் கொள்முதல் குழு, அதிகாரமிக்க அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையில் அமைக்கப்பட்டது.

அமைச்சரவைச் செயலாளர்கள் குழுவின் வழிகாட்டலின்படி, அமைச்சகங்கள் குழுக்கள் விமானக் கொள்முதல், மேலாண்மை, பயன்பாடு ஆகியவை குறித்து முடிவு செய்யப்பட்டது. 2013-ம் ஆண்டு ஆகஸ்டில் இந்த விமானம் விமானப் படைக்கு மாற்றப்பட்டது.

2011 முதல் 2012-வரை இந்த விமானங்களைக் கொள்முதல் செய்வது தொடர்பாக அப்போதைய காங்கிரஸ் அரசில் 10 முறை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது” எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x