Published : 07 Oct 2020 01:58 PM
Last Updated : 07 Oct 2020 01:58 PM
ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலைவராக எந்த விதமான இடைவெளியும் இல்லாமல் தொடர்ந்து 19 ஆண்டுகள் செயல்பட்டு, 20-ம் ஆண்டில் பிரதமர் மோடி இன்று அடியெடுத்து வைக்கிறார்.
கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி குஜராத் முதல்வராக தனது பயணத்தைத் தொடங்கிய பிரதமர் மோடி, 2002, 2007 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் குஜராத் முதல்வராக இருந்தார். அதன்பின் தேசிய அரசியலில் தடம் பதித்த மோடி, 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானார். 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் வென்று பிரதமராக மோடி தொடர்ந்து இருந்து வருகிறார்.
ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசில் தலைமைப் பதவியில் 19 ஆண்டுகளை நிறைவு செய்து இன்றுடன் 20-வது ஆண்டில் பிரதமர் மோடி அடியெடுத்து வைத்து புதிய மைல்கல்லை எட்டுகிறார்.
3-வது முறையாக குஜராத் முதல்வராக மோடி இருந்தபோதுதான் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக 2013-ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டார். அதன்பின் 2014-ம் ஆண்டிலும், 2019-ம் ஆண்டில் நடந்த தேர்தலிலும் பிரதமர் மோடியின் தலைமை அமோக வெற்றி பெற்றது.
20-வது ஆண்டு பயணம் தொடர்பாக பிரதமர் மோடியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
''130 கோடி மக்களின் ஆசைகளை நிறைவேற்றுவதிலேயே பிரதமர் மோடி தனது கவனத்தைச் செலுத்தினார். இந்திய வரலாற்றில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த 370-வது பிரிவு நீக்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ராமர் பிறந்த இடமான அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்டுவது நனவாகி பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன.
விவசாயிகள் மீது செயற்கையாக கட்டப்பட்டிருந்த சங்கிலிகள் அறுக்கப்பட்டு சுதந்திரமாக்கப்பட்டுள்ளார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க வேளாண் சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. தொழிலாளர் சீர்திருத்தங்கள், நிலக்கரிச் சீர்திருத்தங்கள், விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதித்தல், அந்நிய முதலீட்டில் சீர்திருத்தம், வரிச் சீர்திருத்தம் போன்றவை மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் இடப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2001-ம் ஆண்டு குஜராத் முதல்வராக பிரதமர் மோடி பதவியேற்ற அந்த ஆண்டே குஜராத்தின் பூஜ்நகரில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், அதன்பின் மோடி செய்த நலத்திட்டப் பணிகள், நிவாரணப் பணிகள், மக்கள் சார்ந்த கொள்கை முடிவுகள் எடுத்தல் மூலம் மக்களின் மிகப்பெரிய ஆதரவை மோடி பெற்றார்.
பிரதமராக மோடி பதவி ஏற்றபின்பும், மக்கள் சார்ந்த அவரின் திட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. ஜன்தன் திட்டம், முத்ரா திட்டம், ஜன் சுரக்ஷா திட்டம், உஜ்வாலா திட்டம், சவுபாக்யா திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம், பிரதமர் கிசான் திட்டம் உள்ளிட்டபல திட்டங்களை அறிமுகம் செய்தார்.
கரோனா வைரஸ் பரவல் காலத்திலும் மக்கள் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்தன. குறிப்பாக இலவச உணவு தானியங்கள் வழங்குதல், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிதியுதவி, விவசாயிகளுக்கு நிதியுதவி போன்றவை பிரதமர் மோடியின் அரசால் வழங்கப்பட்டன.
பொதுச்சேவையில் தொடர்ந்து 20-வது ஆண்டிற்குள் நுழையும் பிரதமர் மோடி, அனைவருக்குமான வளர்ச்சி எனும் மந்திரத்தின் மூலம், தேசத்தை தற்சார்பு இந்தியாவை எனும் இலக்கை நோக்கி நகர்த்தி வருகிறார்''.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT