Published : 07 Oct 2020 01:20 PM
Last Updated : 07 Oct 2020 01:20 PM

ரூ.8 ஆயிரம் கோடிக்கு விமானம் வாங்கிய பிரதமர் மோடியிடம் ஏன் கேள்வி கேட்கவில்லை?- ராகுல் காந்தி கேள்வி

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குஷன் இருக்கையில் அமர்ந்திருந்த காட்சி: படம் உதவி | ட்விட்டர்.

புதுடெல்லி

மக்களின் பணத்தை வீணாகச் செலவு செய்து தான் பயணிக்க இரு போயிங் விமானங்களைப் பிரதமர் மோடி வாங்கியுள்ளார் அதைக் கேள்வி கேட்கவில்லை. ஆனால், டிராக்டரில் நான் குஷன் இருக்கையில் அமர்ந்ததைக் கேள்வி கேட்கிறீர்கள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ஆகியோர் பயணிக்க பிரத்தியேகமாக ரூ.8 ஆயிரம் கோடி செலவில் இரு போயிங் சொகுசு விமானங்களை மத்திய அரசு வாங்கியுள்ளது. அந்த விமானங்கள் இந்தியாவுக்குக் கடந்த வாரம் வந்து சேர்ந்தன.

இந்நிலையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிராக்டர் ஊர்வலம் மற்றும் போராட்டத்தை மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறார். அப்போது குருஷேத்ரா எனும் இடத்தில் டிராக்டரில் ராகுல் காந்தி செல்லும்போது அமர்வதற்காக குஷன் இருக்கை போடப்பட்டு இருந்தது.

ராகுல் காந்திக்கு குஷன் இருக்கை போடப்பட்டு இருந்தது குறித்து மத்திய அமைச்சர் ஹர்திப்சிங் பூரி ட்விட்டரில் விமர்சித்திருந்தார். அதில், “ டிராக்டரில் குஷன் இருக்கையில் அமர்ந்து ஊர்வலம் செல்வது போராட்டம் அல்ல” என்று கிண்டல் செய்திருந்தார்.

இந்நிலையில் பாட்டியாலாவில் ராகுல் காந்தி விவசாயிகள் பேரணியில் பங்கேற்றிருந்தார். அப்போது மத்திய அமைச்சர் ஹர்திப்சிங் பூரி பேசியது குறித்துக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ராகுல் காந்தி பதில் அளிக்கையில், “பிரதமர் மோடி மக்கள் பணத்தை வீணாக்கி ரூ.8 ஆயிரம் கோடியில் இரு விமானங்களை வாங்கியுள்ளார். அங்கு குஷன் இல்லை. அவரின் வசதிக்காக சொகுசு மெத்தைகளை அமைத்துள்ளார்.

ரூ.8 ஆயிரம் கோடிக்கு இரு விமானங்களை வாங்கிய பிரதமர் மோடியிடம் ஏன் நீங்கள் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. அவரிடம் எந்தக் கேள்வியையும் யாரும் கேட்காதது எனக்கு வியப்பாக இருக்கிறது. ஆனால், அனைவரும் நான் அமர்ந்திருக்கும் குஷன் இருக்கை குறித்தே கேட்கிறீர்கள்.

நமது எல்லையில் சீனப் படைகள் நிறுத்தப்படுகின்றன. அடுத்துவரும் குளிர்காலத்தையும் பொருட்படுத்தாமல் நமது ராணுவ வீரர்கள் நம்மைப் பாதுகாத்து வருகிறார்கள். அவர்களுக்காக ஆயுதங்கள், எரிபொருள், உணவுகள், குளிர்காலத்துக்குத் தேவையான பொருட்கள் கொண்டு செல்லப்படும்போது இவ்வளவு பெரிய தொகையில் விமானம் தேவையா?” எனக் கேள்வி எழுப்பினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x