Published : 06 Oct 2020 02:06 PM
Last Updated : 06 Oct 2020 02:06 PM
மலையாளம் செய்தி ஊடகத்துக்குப் பணியாற்றும் டெல்லியைச் சேர்ந்த நிருபர் உட்பட 4 பேரை உத்தரப் பிரதேச போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.
ஹத்ராஸ் சம்பவத்தில் உ.பி. அரசு முறையாக நடந்து கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சிகள் உட்பட பலதரப்புகளிலிருந்தும் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், ஹத்ராஸ் சம்பவத்தை வைத்து சாதிக்கலவரத்தை தூண்ட சதி நடப்பதாக உ.பி. அரசு கூறிவருகிறது.
இந்நிலையில் இந்த நால்வரையும் மதுரா அருகே உள்ள சுங்கச்சாவடியில் வைத்து உ.பி. போலீஸார் கைது செய்தனர். இவர்கள் டெல்லியிலிருந்து ஹத்ராஸுக்குச் சென்றனர். இவர்களின் நடவடிக்கை சந்தேகத்திற்கு இடமளிப்பதாக போலீஸ் கருதியதாகவும் அதனால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தீக் உர் ரஹ்மான்,, சித்திக்கீ காப்பன், மசூத் அகமது, ஆலம் ஆகிய 4 பேரைத்தான் போலீஸார் சந்தேக அடிப்படையில் கைது செய்துள்ளனர். இதில் சித்திக்கீ காப்பன் பல மலையாள ஊடகங்களுக்காகப் பணியாற்றி வருபவர். இவர் திங்களன்று ஹத்ராஸ் சென்று செய்தி சேகரிக்க வேண்டியிருந்தது.
ஒரு செய்தியாளராக தன் கடமையைச் செய்தவரைக் கைது செய்திருக்கிறீர்கள் உடனடியாக விடுவியுங்கள் என்று கேரள பத்திரிகையாளர் சங்கம் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இவர்களிடம் சந்தேகத்துக்கு இடமான எழுத்துக்கள் இருந்ததாகவும் அது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் என்றும் கைது செய்ததாக மதுரா போலீசார் தெரிவித்தனர். இதில் சித்திகி கப்பான் ஒரு பத்திரிகையாளர் என்றே கருதாமல் போலீஸார் இவர்கள் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் கேம்பஸ் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் கூறுகின்றனர்.
ஆனால் பாப்புலர் ஃபிரன்ட் ஆப் இந்தியா இந்தக் கைதுகளை கடுமையாகக் கண்டித்துள்ளது. இது இழிவானது, சட்ட விரோதமானது என்று தாக்கியுள்ளது. ஹத்ராஸ் பெண்ணுக்கு நீதி கிடைக்கச் செய்யாமல் ‘சதிக்கோட்பாடு’ பேசி திசைத்திருப்புகின்றனர் என்று கடுமையாகச் சாடியுள்ளது.
ஹத்ராஸ் பெண் குடும்பத்தினரை சந்திப்பதே ஏதோ குற்றம் என்பது போல் யோகி ஆதித்யநாத் அரசு காட்டாட்சி செய்வதாக கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT